மனிதர்களே.! என்னை கொன்றுவிட்டீர்களே…! ஒரு திமிங்கலத்தின் கண்ணீர்…

Read Time:7 Minute, 18 Second

தலைப்பை படிக்கையில் என்ன? நாம் கொன்றுவிட்டோமா? என்ற கேள்வி எழலாம். பதில் என்னவென்றால் 100 சதவிதம் உண்மை அதுதான். உயிரினங்கள் தோன்றிய பின்னர் கடல் பகுதி மனிதர்களின் பொறுப்பின்மையால் உலகின் பிளாஸ்டிக் குப்பைத் தொட்டியாக காட்சியளிக்கிறது. மனிதர்கள் செல்ல முடியாத ஆழ்கடலில் அவர்கள் வீசியெறிந்த பிளாஸ்டிக் பைகள் குடியேறி, அப்பகுதியில் வாழும் உயிரினங்களையும் கொன்று வருகிறது. அப்படியென்றால் நாம் கொலையாளிகள் தானே?. உணவுக்காக மீன்களை கொல்லவில்லையா? என்பது வாதத்திற்கு வேண்டுமென்றால் பொருத்தமாக தெரியலாம். அப்போதும் விஷம் யாருக்கு நமக்குதானே…! ஆக மொத்தத்தில் மனிதன் இயற்கையில் வாழ உரிமை பெற்றுள்ள உயிரினங்களுக்கு மட்டுமின்றி தனக்குத் தானே விஷத்தை வைத்துக்கொள்கிறான் என்பதுதான் உண்மை. இப்போது விஷயத்துக்கு வருவோம்…


பிளாஸ்டிக்கை ஒழிப்போம்!


“பூமி மனிதர்களுக்கானது மட்டுமல்ல” பிளாஸ்டிக் தடைக்கு ஒத்துழைப்போம்…


மார்ச் 16-ம் தேதி பிலிப்பைன்ஸ் நாட்டின் டேவோ நகரின் கிழக்குப் பகுதியில் இருந்து வாத்து மூக்கி திமிலங்கலம் ஒன்றை டி போன் கலெக்டர் அருங்காட்சியகத்தின் பணியாளர்கள் மீட்டனர். திமிங்கலத்தின் உயிரிழப்புக்கு காரணம் என்னவென்று ஆய்வினை மேற்கொண்ட போது பெரும் அதிர்ச்சியே காத்திருந்தது. உடற்கூறு ஆய்வுக்காக திமிங்கலத்தின் வயிற்றுப்பகுதியை அறுத்து பார்த்தப்போது, மனிதர்கள் வீசிய பிளாஸ்டிக் கழிவுகளை சாப்பிட்டு, அவை சிக்கி உயிருக்கு போராடி உயிரிழந்துள்ளது தெரியவந்துள்ளது.

கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கலம். அதன் வயிற்றிலிருந்து எடுக்கப்பட்ட பிளாஸ்டிக் பை.

திமிங்கலத்தின் வயிற்றில் 16 அரிசி பைகள், பல ஷாப்பிங் பைகள் என மொத்தம் 40 கிலோ பிளாஸ்டிக் பைகள் இருந்துள்ளது. இந்த தகவலை வெளியிட்டுள்ள அருங்காட்சியகம் “இதுவரை ஒரு திமிங்கலத்தின் உடலில் இத்தனை பிளாஸ்டிக்கை கண்டதில்லை.” திமிலங்கத்தின் உடலில் கண்டுபிடிக்கப்பட்ட அனைத்து பொருட்களின் தகவல்களும் அடுத்த சில தினங்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளது.

அருங்காட்சியகத்தின் நிறுவனர் மற்றும் தலைவர் டேரெல் ப்ளாட்ச்லெ சிஎன்என் தொலைக்காட்சியிடம் பேசுகையில், “திமிலங்கத்தின் உடலில் இருந்த பிளாஸ்டிக் என்னை ஆச்சரியத்தில் மூழ்கடித்துவிட்டது.” என்று கூறியுள்ளார். மனிதர் வீசியது உணவல்ல விஷம் என்று தெரியாமல் சாப்பிட்ட திமிங்கலத்தின் கண்ணீர்,

மனிதர்களே…! இந்த உலகிற்கு வாழவந்த என்னை கொன்றுவிட்டீர்களே..! என்றுதான் இருக்கும் என்பதில் ஐயம் கிடையாது.

இந்த பூமி நமக்கு மட்டுமானது கிடையாது. அனைத்து ஜீவராசிகளுக்குமானது என்பதை மனிதன்தான் உணரவேண்டும். அப்போதுதான் இந்த அவலங்கள் முடிவுக்குவரும்.

திமிங்கலம் பிளாஸ்டிக் கழிவுகளை தின்று உயிரிழப்பது இது முதல் முறையா?

திமிங்கலம் பிளாஸ்டிக் கழிவுகளை தின்று உயிரிழப்பது இது முதல் முறை சம்பவம் கிடையாது. கடந்த வருடம் ஜூன் மாதம் தாய்லாந்தில் இறந்த திமங்கலத்தின் வயிற்றில் 80 கிலோ பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த ஆண்டு இறுதியில் தாய்லாந்து நாட்டில் இந்தோனேசியக் கடற்கரையில் ஒதுங்கிய திமிங்கலத்தின் வயிற்றில் 8 கிலோ பிளாஸ்டிக் கழிவு கண்டெடுக்கப்பட்டது. பிளாஸ்டிக் கழிவால்தான் இந்தத் திமிங்கலம் உயிரிழந்துள்ளது என்பதை மறுக்க முடியாது.

அரசாங்கங்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்

இது சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஒவ்வோர் ஆண்டும் சுமார் 1 கோடி டன் பிளாஸ்டிக் கழிவு கடலில் கலக்கிறது. பெருங்கடலில் சேரும் கழிவுகளை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை எனில் ஒரு தசாப்தத்தில் மூன்று மடங்காக அது உயரும் என பிரிட்டன் அரசு அறிக்கையில் எச்சரிக்கை விடுத்துள்ளது. பிளாஸ்டிக் கழிவுகள், பிலிப்பைன்ஸ் போன்ற தென் கிழக்கு ஆசிய நாடுகளில் பெரும் பிரச்சனையாகவே உள்ளது.


மாறலாம், மாற்றலாம்! சூர்யா நடித்த பிளாஸ்டிக் தடை விழிப்புணர்வு குறும்படம்


2015-ம் ஆண்டு சுற்றுச் சூழல் குறித்து பிரசாரம் செய்யும் பெருங்கடல் பாதுகாப்பு அமைப்பு மற்றும் வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழலுக்கான மெக்கென்சி மையம் வெளியிட்ட அறிக்கைப்படி, பெருங்கடல்களில் சேரும் 60 சதவிகித பிளாஸ்டிக், சீனா, இந்தோனீசியா, பிலிப்பைன்ஸ், வியட்நாம் மற்றும் தாய்லாந்து ஆகிய ஐந்து ஆசிய நாடுகளில் இருந்து வருகிறது.

கடலில் பிளாஸ்டிக் கழிவுகளை சேர்ப்பது வெறுக்கத்தக்கது. “நீர்வழிகள் மற்றும் கடலை ஒரு குப்பைத் தொட்டியாக பயன்படுத்துபவர்களுக்கு எதிராக அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.” என்ற கோரிக்கையை சூழியல் ஆர்வாலர்கள் முன்வைக்கிறார்கள். கால்நடைகள், திமிங்கலம் என ஒவ்வோர் உயிரினமாக பிளாஸ்டிக் கழிவால் உயிரிழந்து வருகின்றன. இது மனிதர்களைத் தாக்கும் நாள் வெகுதொலைவில் இல்லை. அதற்கு முன்பு நாம் விழித்துக்கொள்ள வேண்டிய நேரம் இது…! தமிழக அரசு ஜனவரியில் பிளாஸ்டிக் தடையை அமலுக்கு கொண்டுவந்தது. அது எப்போதும் போல காற்றில் விடப்பட்டது. பிளாஸ்டிக் இல்லாத உலகம் என்பதை சாத்தியமாக்குவது மனிதர்களின் பொறுப்பாகும். நமக்கும் பிற உயிர்களுக்கும் விஷமாகும் பிளாஸ்டிக்கை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்போம், மாற்றம் நம்மிடம் தொடங்கட்டும்…