கேரளாவை அச்சுறுத்தும் வெஸ்ட் நைல் வைரஸ் பரவுவது எப்படி? அறிகுறிகள் என்ன?

Read Time:4 Minute, 23 Second

கேரளாவை அச்சுறுத்தும் வெஸ்ட் நைல் வைரஸ் அறிகுறிகள் என்ன? பரவுவதை தடுப்பது எப்படி?

கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் தாக்கம் காரணமாக 7 வயது சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியும், அச்சத்தையும் ஏபடுத்தியுள்ளது. கோழிக்கோடு அரசு மருத்துவமனையில் வித்தியாசமான காய்ச்சல் அறிகுறியுடன் சேர்க்கப்பட்ட சிறுவனுடைய ரத்த மாதிரியை சோதனை செய்ததில் சிறுவனுக்கு வெஸ்ட் நைல் எனப்படும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதனையடுத்து கேரள அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

இந்த வைரஸ் கேரளத்தை தவிர, மற்ற மாநிலங்களில் இதுவரை பரவவில்லை என்றும், கேரள மாநிலத்துக்கு தேவையான அனைத்து வகை உதவிகளையும் மத்திய அரசு செய்ய தயாராக இருப்பதாகவும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்துள்ளார். இந்த வைரஸ் பற்றியும், அது பரவுவது பற்றியும் தெரிந்துக்கொள்வோம்.

வைரஸ் பரவுவது எப்படி?

வெஸ்ட் நைல் வைரஸ் கொசுக்கள் மூலமாக பரவுகிறது. பறவைகளில் இருந்து கியூலெக்ஸ் வகை கொசுக்கள் மூலமாக மனிதர்களுக்கு பரவுகிறது. மனிதர்களில் இருந்து மனிதர்களுக்கு இந்த நோய் பரவாது. ஆனால் தாய்ப்பால் ஊட்டும் தாயிடமிருந்து, சேய்க்கு இந்த நோய் பரவும்.

வைரஸ் பாதிப்பின் அறிகுறிகள் என்ன?

பொதுவாக வைரஸ் பாதிப்பில் உள்ள நோயாளிகளுக்கு கண்களில் வலி, காய்ச்சல், உடல் வலி, வாந்தி, வயிற்றுப்போக்கு, சருமத்தில் எரிச்சல் ஆகியவை இருக்கும். சில நாட்கள் முதல் சில வாரங்கள் வரையில் இந்த அறிகுறிகள் இருக்கலாம்.

நோய் பாதிப்பை தெரிந்துக் கொள்வது எப்படி?

உடல் பரிசோதனை, முந்தைய மருத்துவ சிகிச்சை மற்றும் ஆய்வக சோதனைகள் அதை கண்டறிய முடியும்.

ஆபத்து எப்போது?

வெஸ்ட் நைல் வைரஸ் மூளைக்குள் நுழைந்தால், உயிருக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம். இது மூளையின் வீக்கம் ஏற்படலாம், மூளையழற்சி அல்லது மூளை மற்றும் முள்ளந்தண்டு வளைவை சுற்றியுள்ள திசுக்களில் வீக்கம் ஏற்படலாம் என தெரிவிக்கப்படுகிறது.

யாருக்கு மோசமானது?

முதியவர்கள், குழந்தைகள் மற்றும் பலவீனமான நோயெதிர்ப்பு சக்தி கொண்டவர்களுக்கு பாதிப்பு மோசமானதாகும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கை என்ன?

வீடுகளுக்கு அருகே தண்ணீர் தேங்கவிடாமல் பார்த்துக்கொள்ளுதல், வீடுகளில் கொசு ஒழித்தல் போன்றவற்றை செய்தாலே இந்த நோய் வராமல் பாதுகாக்க முடியும்.

சிகிச்சை என்ன?

வெட்ஸ் நைல் வைரஸ் நோய்க்கான குறிப்பிட்ட தடுப்பூசிகள் அல்லது சிகிச்சைகள் எதுவும் கிடையாது. வைரஸ் பாதிப்பை தவிர்க்க சிறந்த வழி கொசு கடித்தலை தடுப்பதாகும். நரம்புகளில் ஊடுருவும் வெஸ்ட் நைல் வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சையானது மருத்துவமனையில் அனுமதித்து மூச்சுத்திணறல் இல்லாமல், முன்னெச்சரிக்கை சிகிச்சை அளிக்கப்பட வேண்டும். இரண்டாம் நிலை தொற்று ஏற்படுவதை தடுக்க வேண்டும்.

பாதிப்பு எங்கெல்லாம்?

இந்தக் காய்ச்சல் முதன்முதலாக உகாண்டா நாட்டின் வெஸ்ட் நைல் மாவட்டத்தில் 1937-ம் ஆண்டு கண்டறியப்பட்டது. அதைத் தொடர்ந்து இதற்கு வெஸ்ட் நைல் காய்ச்சல் என்று பெயரிடப்பட்டது. அமெரிக்கா, ரஷியா, ருமேனியா, இஸ்ரேல், கிரீஸ் உள்ளிட்ட நாடுகளில் இந்த பாதிப்பு நேரிட்டுள்ளது.