பா.ஜனதாவின் எஃகு கோட்டையை உடைக்க காங்கிரசுக்காக சல்மான் கான் பிரசாரம்?

Read Time:2 Minute, 53 Second

மத்திய பிரதேசத்தில் பா.ஜனதா கோட்டையில் பிரசாரம் செய்ய சல்மான் கானுக்கு காங்கிரஸ் அழைப்பு விடுத்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலத்தின் வர்த்தக நகரான இந்தூர் பா.ஜனாவின் எஃகு கோட்டையாகும்.

1989-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ம.பி. முன்னாள் முதல்வரும், காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலைவருமான பிரகாஷ் சந்திரா சேதி போட்டியிட்டார். அப்போது அவரை எதிர்த்து களமிறங்கிய பா.ஜனதவின் சுமித்ரா மகாஜன், பிரகாஷ் சந்திரா சேதியை தோற்கடித்து அமோக வெற்றியை தனதாக்கினார். அத்தொகுதியின் சகோதரியானார். இன்று வரையில் சுமித்ரா மகாஜன்தான் அத்தொகுதியின் நிரந்தர எம்.பி.யாக இருக்கிறார்.

இப்போது நாடாளுமன்ற மக்களவையில் சபாநாயகராக உள்ளார் மகாஜன். இந்த தொகுதிக்கு உள்பட்ட சட்டமன்றத் தொகுதிகளிலும் பா.ஜனதா வெற்றியை தனதாக்கி வருகிறது. பா.ஜனதாவின் எஃகு கோட்டையாக உள்ள இந்தூரில் வெற்றியை தனதாக்க காங்கிரஸ் வியூகம் ஒன்றை வகுத்துள்ளது. இந்தி நடிகர் சல்மான் கானை களமிறக்க முயற்சி செய்கிறது. சல்மான் கான் 1965- ஆண்டு இந்தூரின் பாலாசியா பகுதியில் பிறந்தவர், மும்பைக்கு வருவதற்கு முன்னதாக அங்குதான் இருந்துள்ளார்.

இப்போது அவரை இந்தூருக்கு அழைத்து பிரசாரம் செய்யுமாறு காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது. காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பங்கஜ் சதூர்வேதி பேசுகையில், “இந்தூரில் எங்களுக்காக பிரசாரம் செய்ய எங்களுடைய கட்சி தலைமை சல்மான் கானிடம் பேசியுள்ளது. எங்களுக்காக அவர் போட்டியிடுவார் என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.” என கூறியுள்ளார்.

அரசியலில் இருந்து விலகி இருக்கும் சல்மான் கான் காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பாரா? மாட்டாரா? என்ற கேள்வி இருந்தாலும், ஏற்கனவே களமிறங்கி தோல்விதான் காங்கிரசுக்கு மிஞ்சியது என்பது வரலாறு. 2009-ல் இந்தூர் மேயர் தேர்தலில் காங்கிரசுக்காக பிரசாரம் செய்தார் சல்மான் கான். ஆனால் பா.ஜனதா வேட்பாளர் சங்கவி வெற்றிப் பெற்று மேயர் ஆனார். இப்போது 10 ஆண்டுகளுக்கு பின்னர் அவருடைய ஆதரவை காங்கிரஸ் நாடியுள்ளது.