லண்டனில் கைது செய்யப்பட்ட நிரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு, சிறையில் அடைக்க உத்தரவு

Read Time:3 Minute, 23 Second

லண்டனில் கைது செய்யப்பட்ட நிரவ் மோடிக்கு ஜாமீன் வழங்க மறுப்பு தெரித்த நீதிமன்றம் சிறையில் அடைக்க உத்தரவிட்டது.

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று மோசடி செய்து லண்டனுக்கு தப்பிவிட்டார். அவரை இந்தியாவிற்கு கொண்டுவர இந்தியா முயற்சிகளை மேற்கொண்டது. இறுதியில், லண்டனில் இருந்து வெளியாகும் தி கார்டியன் அவருடைய இருப்பிடம் தொடர்பான தகவல்களை வெளியிட்டது. இதனையடுத்து அவரை இந்தியாவிற்கு அழைத்து வரும் நடவடிக்கையை மத்திய அரசு தீவிரப்படுத்தியது.

இந்திய அமலாக்கப்பிரிவு சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் நீரவ் மோடியை நாடு கடத்த அனுமதிக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டது. இதையடுத்து, அவரை கைது செய்ய லண்டன் வெஸ்ட் மினிஸ்டர்ஸ் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்தது. இதனையடுத்து நிரவ் மோடி கைது செய்யப்பட்டு லண்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது அவரது சார்பில் ஜாமீன் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

ஜாமீன் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி கூறுகையில் “13 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி வழக்கு சம்பந்தப்பட்ட நிரவ் மோடியை வெளியே விட முடியாது. அவ்வாறு ஜாமீனில் விடுவித்தால் நீங்கள் தப்பியோடி விடுவீர்கள். மீண்டும் சரண்டர் ஆக வாய்ப்பில்லை. எனவே அவரை மார்ச் 29-ம் தேதி வரை சிறையில் அடைக்க வேண்டும். விசாரணை ஒத்தி வைக்கப்படுகிறது” என்று கூறிவிட்டார். இதனையடுத்து மார்ச் 29-ம் தேதி வரையில் நிரவ் மோடி சிறையில் அடைக்கப்படுகிறார்.

இதற்கிடையே நிரவ் மோடிக்கு சொந்தமான 58 கோடி ரூபாய் மதிப்பிலான ஓவியங்கள் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் போர்ஸ்ச் மற்றும் மெர்சிடஸ் கார்கள் உள்ளிட்டவற்றை ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளது என அமலாக்கப்பிரிவு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கி கிளர்க் எச்சரிக்கை

நிரவ் மோடியை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவிட்ட பின்னர், சரண் அடைவது தொடர்பாக அவருடைய சட்டக்குழுவிற்கும், ஸ்கார்ட்லாந்து போலீசுக்கும் இடையே வாக்குவாதம் தொடர்ந்து உள்ளது. இதற்கிடையே லண்டனில் உள்ள மெட்ரோ பாங்க் கிளையில் புதிய வங்கி கணக்கை தொடங்குவதற்காக நிராவ் மோடி சென்றுள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த கிளர்க் ஒருவர் போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இந்த வழக்கு பிரபலமான செய்தியால் நிரவ் மோடியை அடையாளம் கண்ட அவர் போலீசிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து போலீஸ் அவரை கைது செய்துள்ளது.