பிரதமர் மோடிக்கு பிரியங்கா ‘நறுக்’ பதிலடி

Read Time:4 Minute, 8 Second

பா.ஜனதாவிற்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் பிரியங்கா காந்தி தீவிர பிரசாரத்தை மேற்கொண்டு வருகிறார்.

காங்கிரஸ் கட்சியை விமர்சனம் செய்யும் போது எல்லாம் பிரதமர் மோடி, கடந்த 70 ஆண்டுகளாக நாட்டில் வளர்ச்சி இல்லை ஊழல்தான் மலிந்திருக்கிறது, கடந்த 70 ஆண்டுகளாக செய்ய முடியாததை நாங்கள் இந்த நான்கரை ஆண்டுகளில் சாதித்துள்ளோம் என்று விமர்சிப்பது வழக்கம். இதற்கு பதிலடி கொடுக்க முடியாது காங்கிரஸ் திணறியது. பா.ஜனதா தொண்டர்களும், மோடியின் இந்த தாக்குதலையே ஆயுதமாக ஆங்காங்கே பயன்படுத்தி வந்ததும் குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோடியின் இவ்விமர்சனத்திற்கு பிரியங்கா மோடி நேற்று பதிலடியை கொடுத்தார். “தேர்தல் வாக்குறுதிகளை அளிப்பதற்கும் அதனை நிறைவேற்றுவதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. 70 ஆண்டுகளாக ஒன்றுமே நடக்கவில்லை, வளர்ச்சியில்லை என்ற பிதற்றலுக்கும் காலாவதி தேதியுண்டு. நீங்கள்தான் (பா.ஜனதா) இந்த 5 ஆண்டுகள் ஆட்சியில் இருக்கிறீர்கள், என்ன செய்து விட்டீர்கள்?” என்று எதிர்க்கேள்வி எழுப்பினார்.

பிரதமர் மோடி குற்றச்சாட்டு

இதனையடுத்து பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தைப் பதிவிட்டார். “2014-ம் ஆண்டு தேசத்தின் மக்கள், வாரிசு ஆட்சிக்குப் பதிலாக, நேர்மைக்கு வாக்களித்தனர். எப்போதெல்லாம் வாரிசு ஆட்சி அதிகாரம் பெறுகிறதோ, அப்போது, ஜனநாயக அமைப்புகள் தாக்குதலுக்கு ஆளாகின்றன. குடும்பமே பிரதானம் என்ற அடிப்படைக்குப் பதிலாக இந்தியா பிரதானம் என்ற கொள்கையோடு அரசு பணியாற்றுகிறது” எனக் குறிப்பிட்டார்.

எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றம், பத்திரிகை, அரசமைப்பு, நீதிமன்றம், அரசு அமைப்புகள், ராணுவம் அனைத்தையும் இழிவுபடுத்துகின்றன என்றும் குற்றம் சாட்டினார் பிரதமர் மோடி.

பிரியங்கா பதிலடி

பிரதமர் மோடியின் இந்த குற்றச்சாட்டுக்கு மீண்டும் பதிலடி கொடுத்த பிரியங்கா, பா.ஜனதா 5 ஆண்டுகளாக திட்டமிட்டு பத்திரிகை உள்ளிட்ட அனைத்து அரசு அமைப்புகள் மீதும், ஜனநாயக அமைப்புகள் மீதும் திட்டமிட்டு தாக்குதல் நடத்தி வருகிறது. மக்கள் முட்டாள்கள் என்று நினைத்து கொண்டிருப்பதை பிரதமர் மோடி முதலில் நிறுத்திக்கொள்ளட்டும். தேசத்தில் நடக்கும் அனைத்தையும் மக்கள் புரிந்துகொள்கிறார்கள், பார்த்துக் கொண்டிருக்கிறார்கள், கவனித்துக் கொண்டிருக்கிறார்கள். நான் எதற்கும் அச்சப்படப் போவதில்லை.

ஏதாவது நடந்தால் கூட நாங்கள் துன்புறுத்தப்படுவோம். அதற்காக நான் அச்சப்படமாட்டேன். பாஜகவினருக்கு எதிராகத் தொடர்ந்து நாம் போராடுவோம். எங்களை அவர்கள் அதிகமாக துன்பப்படுத்தினால், நாங்கள் இன்னும் ஆவேசமாக எழுந்து வருவோம். அதிகாரம் தலைக்கு ஏறும்போது, இரு தவறான நோக்கங்கள் எழுகின்றன. ஒன்று மக்களை எளிதாக தவறான பாதைக்குத் திருப்பி விடலாம். இரண்டாவது தனக்கு எதிராக பேசுபவர்களை அச்சுறுத்துவது. நாங்கள் அச்சப்படப் போவதில்லை. அவர்கள் எங்களை என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். எங்களை துன்பப்படுத்தினால், எங்கள் போராட்டம் வீரியமாகும் என காட்டமாக பதிலளித்துள்ளார்.