இன்னொரு இளைஞனும் சிக்குகிறான்…, பொள்ளாச்சியை தாண்டி விசாரணை நகரும் என தகவல்

Read Time:5 Minute, 16 Second

பொள்ளாச்சியை தாண்டி விசாரணை நகரும் என சிபிசிஐடி போலீஸ் தகவல் வெளியாகியுள்ளது.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பொள்ளாச்சியை அடுத்த சின்னப்பம்பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 27) மற்றும் அவனது கூட்டாளிகளான சபரிராஜன்(25), சதீஷ்(29), வசந்தகுமார்(24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் திருநாவுக்கரசை 4 நாட்கள் போலீஸ் காவலில் எடுத்து விசாரித்தனர்.

விசாரணையில் முக்கிய தகவல் கிடைத்ததாக போலீஸ் தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சிறையிலிருக்கும் திருநாவுக்கரசின் கூட்டாளிகள் சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார் ஆகிய 3 பேரையும் சி.பி.சி.ஐ.டி. போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க திட்டமிட்டுள்ளனர். திருநாவுக்கரசுவிடம் போலீஸ் விசாரணை செய்த போது, பாதிக்கப்பட்ட பெண்கள் சிலர் சில மாதங்களுக்கு முன்பு போலீசில் புகார் செய்தனர். ஆனால் பணம் கொடுத்து நாங்கள் அதில் இருந்து தப்பினோம் என வாக்குமூலம் கொடுத்துள்ளான் என செய்தி வெளியாகியுள்ளது.


பொள்ளாச்சி பலாத்கார சம்பவத்தில் முக்கிய குற்றவாளி தப்பிக்க உதவிய போலீசார்…! திடுக்கிடும் தகவல்


திருநாவுக்கரசு அளித்த வாக்குமூலத்தில் பெரிய கும்பல் அவனுக்கு கீழ் இயங்கியுள்ளது. மாதம் ரூ.2 லட்ச ரூபாய் வரை அந்த கும்பலுக்கு திருநாவுக்கரசு செலவு செய்துள்ளதாகவும் காவல்துறை வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது. மாதம் ரூ. 2 லட்சம் செலவு செய்யவேண்டும் என்றால் அதற்கான வருமானம் எந்த அளவுக்கு இருக்கும், எந்த வகையில் யார் யாரிடம் எல்லாம் பணம், நகை பறித்தார்கள், பெரிய மனிதர்கள் தொடர்பு மூலம் எவ்வளவு பணம் பார்த்தார்கள், வீடியோக்களை வெளியில் விற்று பணம் பார்த்தார்களா? என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை நடத்தியதாக கூறப்படுகிறது.

போலீஸ் விசாரணையில் திருநாவுக்கரசு பல தகவல்களைக் கூறியுள்ளதாகவும் அதில் முக்கியமாக இளைஞர் ஒருவர் குறித்து தகவல் தெரிவித்துள்ளதாகவும் அவரை ஓரிரு நாளில் போலீஸார் கைது செய்ய உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

அவர் கைது செய்யப்பட்டால், இந்த நெட்வொர்க்கில் உள்ள மேலும் சிலரும் அடுத்தடுத்து சிக்குவார்கள் எனத் தெரிகிறது. தற்போது சிபிசிஐடி போலீஸார் விசாரணையில் மேலும் வீடியோக்கள் சிக்கியதாகவும், அவற்றில் சபரிராஜன், சதீஷ் ஆகியோரின் அந்தரங்க வீடியோக்கள்தான் அதிகம் உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரை எத்தனை வீடியோக்கள் கிடைத்துள்ளன என்பது குறித்து இறுதி செய்யவில்லை. விசாரணை தொடர்ந்து நடக்கிறது என போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே பொள்ளாச்சியை தாண்டி விசாரணை நகரும் என சிபிசிஐடி போலீஸ் தரப்பு தகவல் தெரிவிப்பதாக தி நியூஸ் மினிட் செய்தி இணையதளம் வெளியிட்டுள்ளது. விசாரணையில் சிக்கும் தகவலின் அடிப்படையில் விசாரணை நகர்கிறது. பாதிக்கப்பட்டவர்கள் எத்தனைப் பேர் என்று இப்போது சொல்ல முடியாது. விசாரணை மிகவும் முக்கியமான கட்டத்தில் உள்ளது. எத்தனை பேர் என்பதை நாங்கள் இப்போது சொல்ல முடியாது. 10 அல்லது 60 என்பதைவிட உண்மையான விஷயம் என்றால் அவர்கள் மனிதர்கள். இப்போதைக்கு பாதிக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பதில் எந்த முடிவுக்கும் வரவில்லை. மீடியாக்கள் 60 என்று கூறாலாம், நாங்கள் எதையும் சொல்ல முடியாது.

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் புகார் கொடுக்க முன்வரவில்லை. பாதிக்கப்பட்டவர்களை நாங்கள் அடையாளம் கண்டுபிடித்தாலும், அவர்களை அணுக முடியாது. இது மிகவும் உணர்வுப்பூர்வமான விஷயமாகும் என சிபிசிஐடி உயர்மட்ட தகவல் தெரிவிப்பதாக அச்செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.