மோடி எதிர்ப்பு கடைசியில் காங்கிரஸ் எதிர்ப்பானது…!

Read Time:5 Minute, 36 Second

2019 தேர்தலில் மோடி எதிர்ப்பு, காங்கிரஸ் எதிர்ப்பு என்ற நிலையையும் காட்டுகிறது. 2018-ல் கர்நாடகாவில் பா.ஜனதா ஆட்சியமைப்பதை குமாரசாமியுடன் கைகோர்த்து காங்கிரஸ் தடுத்தது. பதவியேற்பு விழாவில் அனைத்து எதிர்க்கட்சி தலைவர்களும் ஒன்றாக இணைந்து மோடிக்கு எதிரான குரலை எழுப்பினர். பணமதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி, வேலைவாய்ப்பு, விவசாயிகள் பிரச்சனை, ரபேல் விவகாரங்களை எழுப்பிய எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைய வேண்டும் என்ற கோஷங்களை ஒருசேர எழுப்பியது.

நாடு தழுவிய எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைப்பு என்பது மோடி அரசுக்கு நெருக்கடியை கொடுக்கும், மீண்டும் ஆட்சிக்கு வருவது கடினமாகும் என கூறப்பட்டது. பிப்ரவரியில் இடைக்கால பட்ஜெட் தாக்கல், பாகிஸ்தானில் இந்திய விமானப்படை தாக்குதல் சம்பவம் மோடி அரசை நெருக்கடியிலிருந்து தப்பிக்கும் நிலைக்கு உயர்த்தியது. இதற்கிடையே கூட்டணியென்று கோஷம் எழுப்பிய அரசியல் கட்சிகள் அனைத்தும் நோக்கம் என்ன? என்பதை மறந்து மங்க தொடங்கியன.

வெற்றி முக்கியமா? போட்டியிடும் தொகுதிகள் முக்கியமா? என்பதில் எதிர்க்கட்சிகள் கவனம் செலுத்தவில்லை. காங்கிரசும் பிராந்திய கட்சிகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியில் விட்டுக்கொடுக்கும் நிலைக்கு வரவில்லை. ஆனால் பா.ஜனதா கூட்டணியை ஒன்றாக இணைப்பதில் மிகுந்த சிரமம் எடுக்கவில்லை. பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், மராட்டியத்தில் சிவசேனா, கேரளாவில் பா.ஜனதாவுடன் ஒத்த கருத்துடைய கட்சிகள், தமிழகத்தில் அதிமுக என கூட்டணியிலும் ஸ்திரம் காட்டியது.

மறுபுறம் கூட்டணி அமைப்பு என்பதில் தமிழகம், மராட்டியம் தவிர்த்து பிற முக்கிய மாநிலங்களில் வியூக தோல்வியில் காங்கிரஸ் சிக்கியுள்ளது. தமிழகத்தில் 10 தொகுதிகளை வாங்கினாலும் யார்? போட்டியென்பதில் இடியாப்ப சிக்கலில் சிக்கியுள்ளது.

உத்தரபிரதேசம்: உத்தரபிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடியும், பகுஜன் சமாஜ் கட்சியும், காங்கிரஸை கழற்றிவிட்டு கூட்டணியை அமைத்தது. இதற்கு அடுத்து தனியாக களமிறங்கிய காங்கிரஸ் மீதும் பிற கட்சிகள் கோபத்தை காட்டுகிறது. மாநிலத்தில் காங்கிரசுக்கு வாக்கு வங்கியில்லை என்று எளிதாக சொல்லிவிட முடியாது. இப்போது பிரியங்காவின் வருகையும் வாக்குகளை பிரிக்கும் இது பா.ஜனதாவிற்கு சாதகமான நிலையை ஏற்படுத்தும் என அக்கட்சிகள் அச்சம் கொள்கிறது.

மேற்கு வங்காளம்: மேற்கு வங்காளம் மாநிலத்தில் திரிணாமுல் காங்கிரஸ் அதி பலத்துடன் உள்ளது. எனவே, காங்கிரஸை அது ஏற்க விரும்பவில்லை. 42 தொகுதிகளும் தனக்குதான் என நினைக்கிறது. காங்கிரஸின் டெல்லி தலைமை திரிணாமுல் காங்கிரஸ் கூட்டணியை விரும்பினாலும், மாநில தலைமை இடதுசாரியுடன் செல்வதை விரும்பியது. இந்த இழுபறிக்கு இடையே 38 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்தது இதுசாரிகள் கூட்டணி. இப்போது மீதம் இருப்பது 4 தொகுதிகள்தான். காங்கிரஸை சேர்க்க வேண்டாம் என்ற நிலைதான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் உள்ளது என கூறப்படுகிறது.

பீகார்: 40 தொகுதிகளைக் கொண்ட பீகாரை பொறுத்தவரையில் காங்கிரசும், லாலுவின் ராஷ்டீரிய ஜனதா தளமும் கூட்டணி அமைப்பதில் இழுபறி காணப்பட்டது. சிறிய கட்சிகளை கூட்டணியில் இடம்பெற செய்துள்ள லாலு கட்சி காங்கிரசுக்கு 8 தொகுதிதான் தருவதாக கூறுகிறது, ஆனால் 11 தொகுதிகளை காங்கிரஸ் கேட்கிறது. “உங்களுக்கு கூட்டணியில் விருப்பம் இருந்தால் தருவதை வாங்கிக்கொள்ளுங்கள், இல்லையெனில் தனியாக போட்டியிடுங்கள் அதிக தொகுதிகளில் நிற்கலாம்,” என லாலு கட்சி தலைமை கூறிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

டெல்லி: டெல்லியை பொறுத்தவரையில் 7 தொகுதிகள்தான் உள்ளது. ஆனால் கூட்டணி அமைக்க ஆம் ஆத்மி முன்வந்தது. ஆனால் காங்கிரஸ் தலைமையின் வேறுபாடு காரணமாக தனியாக செல்வதாக காங்கிரஸ் அறிவித்தது. இந்த எதிர்க்கட்சிகள் மோடியை எதிர்ப்பாக நினைத்தாலும் காங்கிரஸையும் தன்னுடன் சேர்த்துக்கொள்ள விரும்பவில்லை. பா.ஜனதா, மோடியிடம் காட்டும் தொலைவை காங்கிரசிடமும் இக்கட்சிகள் காட்டுக்கின்றன என்பது வெளிப்படையாக தெரிகிறது.