கேரளாவில் ஆளும் கட்சியின் அலுவலகத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை

Read Time:2 Minute, 51 Second

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக இளம்பெண் போலீசில் புகார் தெரிவித்துள்ளார்.

பாலக்காடு மாவட்டம் செருபலச்சேரியில் பிறந்த குழந்தையொன்று சனிக்கிழமை சாலையோரம் கிடந்துள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்ட போது குழந்தையின் தாய் கண்டுபிடிக்கப்பட்டார். அவரிடம் விசாரணை மேற்கொண்ட போது அதிர்ச்சி தகவல் வெளியாகியது. அதாவது, 10 மாதங்களுக்கு முன்னதாக அப்பகுதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் கட்சியின் மாணவ அமைப்பை சேர்ந்த இளைஞரால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக கூறியுள்ளார்.

இதுதொடர்பாக புகாரளித்து உள்ள 21 வயது இளம்பெண், கல்லூரி இதழ் ஒன்றுக்கு தகவல் சேகரிக்க சென்ற போது இச்சம்பவம் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார். போலீசார் இச்சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டு வருகிறார்கள். குழந்தையும், பாதிக்கப்பட்ட பெண்ணும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். உள்ளூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவர் இச்சம்பவம் தொடர்பாக பேசுகையில், பாதிக்கப்பட்ட மாணவியும் கட்சியின் மாணவர் அமைப்பை சேர்ந்தவர்தான். கட்சிக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் நெருங்கிய தொடர்பு உள்ளது.

விசாரணை செய்து வருகிறோம். போலீசாரும் உண்மையான விசாரணையை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

2019 தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இச்சம்பவம் வெளியே வந்துள்ளது ஆளும் கட்சிக்கு நெருக்கடியை கொடுக்கும் என பார்க்கப்படுகிறது. பாலியல் பலாத்காரம் சம்பவத்தை கண்டுத்து காங்கிரஸ் தரப்பில் பேரணியும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதாலா பேசுகையில், மார்க்சிஸ்ட் அலுவலகம் இப்போது பலாத்கார மையமாகியுள்ளது. இதனை கூற வருத்தம் அடைகிறேன். ஆனால் இதுதான் உண்மை. இடதுசாரிகள் ஆட்சியில் கேரளாவில் பெண்கள் பாதுகாப்பு இல்லாமையை உணர்கிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.