தேர்தலில் போட்டியில்லை.. ஆனால்… பிரதமர் பதவிக்கான ஆசையை வெளியிட்ட – மாயாவதி

Read Time:2 Minute, 18 Second

தேர்தலில் போட்டியில்லை என கூறிய மாயாவதி பிரதமர் பதவிக்கான ஆசையை வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.

80 தொகுதிகள் கொண்ட உ.பி.யில் சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கட்சிகள் பா.ஜனதாவிற்கு எதிராக கூட்டணி வைத்துள்ளது. அதிக தொகுதிகளில் போட்டியிட விரும்பிய இரு கட்சிகளும் காங்கிரஸை கழற்றிவிட்டுவிட்டது. இதற்கிடையே காங்கிரசும் தனியாக களமிறங்கியுள்ளது. பிரியங்காவையும் களத்தில் இறக்கியுள்ளது. இதனால் வாக்குகள் பிரியும் என பார்க்கப்படுகிறது. இதனால் காங்கிரஸ் மீது கோபம் கொண்டுள்ள மாயாவதி, தேர்தலில் போட்டியில்லை என்றார்.

மாயாவதி பேசுகையில், நாட்டில் தற்போது நிலவும் சூழ்நிலை, தேசத்திற்கான தேவை, கட்சியின் நலன், பொதுமக்களின் நலன் உள்ளிட்டவற்றை கருத்தில் கொண்டு பணியாற்ற உள்ளேன். நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியில்லை என முடிவு செய்துள்ளேன். உ.பி.யில் அமைந்துள்ள மகா கூட்டணியில் எந்தஒரு பாதிப்பும் ஏற்பட்டு விடக்கூடாது என்பதில் கவனமாக உள்ளேன். என்னுடைய தனிப்பட்ட வெற்றியைவிட ஒவ்வொரு தொகுதியிலும் வெற்றி மிகவும் முக்கியமானது, அதற்காக பணியாற்றுகிறேன் என்றார்.

இருப்பினும் தேர்தலில் போட்டியில்லை என்ற மாயாவதி, பிரதமருக்கான போட்டியில் உள்ளேன் என்பதை குறிப்பிட்டுள்ளார். 1995-ம் ஆண்டு முதல் முறையாக நான் முதல்வரான போது, சட்டசபை உறுப்பினர் கிடையாது. சட்டவிதிகளின்படி பிரதமராகவோ, முதல்வராகவோ பதவியேற்கும் ஒருவர் 6 மாதங்களில் அவையின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும். தேர்தலில் போட்டியிட முடியவில்லை என்பதால் எனக்கு எந்தஒரு மனச்சோர்வும் கிடையாது என கூறியுள்ளார்.