தேர்தல் பிரசாரம்: காங்கிரஸ் – பா.ஜனதாவுக்கு கதவை அடைத்த சல்மான் கான்…

Read Time:2 Minute, 10 Second

தேர்தல் பிரசாரம் விவகாரத்தில் காங்கிரஸ், பா.ஜனதாவுக்கான கதவை சல்மான் கான் அடைத்துவிட்டார்.

இந்தி நடிகர் சல்மான் கானின் சொந்த ஊர் மத்திய பிரதேச மாநிலம் இந்தூர் ஆகும். இந்தூர் நாடாளுமன்றத் தொகுதி பா.ஜனதாவின் கோட்டையாகும். நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகராக இருக்கும் சுமித்ரா மகாஜன் 1989-ம் ஆண்டிலிருந்து வெற்றிப்பெற்று வருகிறார். இங்கு சல்மான் கானை பிரசாரம் செய்ய வைக்க காங்கிரஸ் முயற்சி செய்தது. இதனை வெளிப்படையாகவே காங்கிரஸ் தெரிவித்தது.

இந்நிலையில் பிரதமர் மோடி 13-ம் தேதி போட்ட கோரிக்கை டுவிட்டிற்கு சல்மான் கான் பதில் அளித்தார். இளைஞர்கள் வாக்களிப்பதை ஊக்குவிக்குமாறு சல்மான் கான், அமிர் கானை டுவிட்டரில் பிரதமர் மோடி கேட்டுக்கொண்டார். இதற்கு இன்று பதிலளித்த சல்மான் கான், “நாம் ஜனநாயக நாட்டில் உள்ளோம், வாக்களிப்பது ஒவ்வொரு இந்தியரின் உரிமையாகும். வாக்களிக்க தகுதிப்பெற்ற இந்தியர்கள் தங்களுடைய வாக்கை பதிவு செய்ய வேண்டும், அரசை நிர்ணயம் செய்வதில் பங்குப்பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்,” என குறிப்பிட்டார்.

இது பா.ஜனதாவிற்காக சல்மான் கான் பிரசாரம் செய்ய உள்ளார் என்ற புரளிக்கு வழிவகை செய்தது. இந்நிலையில் இதற்கு மறுப்பு தெரிவிக்கும் வகையில் சல்மான் கான் வெளியிட்ட செய்தி பா.ஜனதாவுக்கு மட்டுமல்ல காங்கிரசுக்குமான கதவை சல்மான் கான் மூடியதை காட்டுகிறது. “தேர்தல்களில் போட்டியிடவில்லை, எந்த கட்சிக்கும் பிரசாரம் செய்யப்போதும் கிடையாது,” என சல்மான் கான் கூறிவிட்டார்.