ஊரெங்கும் திருவிழாக் கோலம்… மகிமைகள் மிகுந்த பங்குனி உத்திரம்!

Read Time:5 Minute, 42 Second

தமிழில் 12 வது மாதமான பங்குனி பௌர்ணமியுடன் 12-வது நட்சத்திரமான உத்திரம் இணையும் புண்ணிய நாளே பங்குனி உத்திரம். மங்களங்கள் யாவும் பொங்கிப் பெருகும் இந்த இனிய நாளில் ஊரெங்கும் திருவிழாக் கோலமாக காணப்படும். தமிழகத்தில் பெருமாள், சிவன், முருகன், சாஸ்தா, அம்பாள் கோவில்களில் திருவிழாவும், திருமணக்காட்சிகளும் நடைபெறும் நாள் இதுவாகும். தெய்வத் திருமணங்கள், திருவுலாக்கள், திருவிளக்கு பூஜை, தீர்த்தவாரி, தேர்த்திருவிழா என ஊரெங்கிலும் விழா நடக்கும் இந்நாளில் தெய்வங்களின் திருமணங்கள் நடைபெற்றன என்று புராணங்கள் கூறுகின்றன. இந்நாள் சிவ மற்றும் முருகப் பெருமானை வழிபட உகந்த நாள். திருமணத் தடைகள் அனைத்தும் விலகும்.

* திருமகள் பங்குனி உத்திர விரதத்தை மேற்கொண்டு திருமாலின் மார்பில் நிரந்தர இடம் பிடித்த புனிதமான நாளாகும். பார்க்கவ மஹரிஷியின் மகளாக மகாலட்சுமி, பார்கவி என்ற பெயரில் பூமியில் பிறந்த நாளும் பங்குனி உத்திர நாளில்தான். எனவே, இந்த நாள் லட்சுமி கடாட்சமாக விளங்குகிறது.

* பன்னிரு கையும், பன்னிரு விழியும், பன்னிரு செவியும் கொண்ட முருகனின் சிறப்பான நாளாக கருதப்பட்டு, முருகப்பெருமான் எழுந்தருளியிருக்கும் ஆலயங்கள்தோறும் சிறப்பான விழா கொண்டாடப்படுகிறது. முருகப் பெருமான் சுவாமி மலையில் சிவபெருமானுக்கு பிரணவப் பொருளை உபதேசித்த நாள் பங்குனி உத்திரம்.

* ஶ்ரீ வள்ளி அவதரித்ததும் இந்நாளே. முருகன் குடிகொண்டுள்ள திருத்தலங்களில் இந்நாளைப் பிரம்மோற்ஸவமாகவும், திருமண உற்சவமாகவும் கொண்டாடப்படுகிறது. அசுரர்களை வென்ற முருகனுக்கு, இந்திரன் தன் மகள் தெய்வானையை திருமணம் செய்து கொடுத்த நாள் பங்குனி உத்திரம்.

* பங்குனி உத்திர நாளில்தான் மீனாட்சி- சுந்தரேஸ்வரர் திருமணம் நடைபெற்றது. மனிதன் எப்படி வாழவேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்த ஶ்ரீராமன் சீதையைக் கரம் பிடித்த தினமும் பங்குனி உத்திரமே. லட்சுமணன்- ஊர்மிளா, பரதன்- மாண்டவி; சத்ருக்கனன்- சுருதகீர்த்தி ஆகியோரின் திருமணங்கள் நடைபெற்றுள்ளன. இதேநாளில்தான் காஞ்சிபுரம் ஏகாம்பரநாதரின் திருமணமும் நிகழ்ந்தது. ஆண்டாள் – ரங்கமன்னார்; அகத்தியர் – லோபாமுத்திரை; ரதி – மன்மதன்; இந்திரன் – இந்திராணி; நந்தி – சுயசை; சாஸ்தா – பூரணை, புஷ்கலை; சந்திரன் – 27 நட்சத்திர மங்கையர் என அனைத்து திருமணங்களும் இந்நாளில்தான் நடைபெற்றன.

சிவசக்தி.

* தனது தவத்தைக் கலைத்ததால் மன்மதனை எரித்து சாம்பலாக்கினார் ஈசன். இதனால் வருந்திய ரதிதேவி, மன்மதனை உயிர்ப்பித்துத் தருமாறு ஈசனிடம் வேண்டினாள். அதனால் மனம் இரங்கிய ஈசன், அவள் கண்களுக்கு மட்டும் தெரியும்படி மன்மதனை உயிர்ப் பித்தார். இது நிகழ்ந்ததும் பங்குனி உத்திரத் திருநாளில்தான்.

* பங்குனி மாதம் திருமழப்பாடியில் நடைபெறும் நந்தி கல்யாணத்தை தரிசித்தால் மணமாகா தவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும் என் பது ஐதீகம்.

* பிரம்மன்- சரஸ்வதி, தேவேந்திரன்- இந்திராணி ஆகியோருக்கும் பங்குனி உத்திர விரதம் மேற்கொண்டதால், திருமணம் கைகூடிய தாகப் புராணங்கள் சொல்கின்றன.

* கேரளாவில் பந்தளராஜன் மகனாக ஐயப்பன் அவதரித்த தினம் இன்று தான். சபரிமலையில் இந்நாளில் ஐயப்பனுக்கு ருத்ரம் சொல்லி அபிஷேகம் செய்கிறார்கள்.

* பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ஜுனன் இத்தினத்தில் பிறந்ததால் பல்குநன் என்று பெயர் பெற்றார்.

* காரைக்கால் அம்மையார், முக்தி பெற்ற தினம்.

* பங்குனி உத்திர விரத மகிமையால் சந்திரன் 27 அழகிய கன்னியரை மனைவியாகப் பெற்றார்.

வரப்போகும் வசந்தகாலத்துக்கு முன்னோட்டமாக அமைந்திருக்கும் பங்குனி மாதம் உத்திர நாளில் நாம் இறைவனை வழிபட்டால், வாழ்க்கையில் என்றென்றும் மகிழ்ச்சி நிலைத்திருக்கும். திருமணம் ஆகாதவர்கள் விரதம் இருந்து, ஆலயங்களில் நடைபெறும் இறைவனின் திருமணக் கோலத்தை தரிசித்தால், விரைவில் திருமணம் கைகூடும் என்பது ஐதீகம். இந்த நாளில் விரதமிருந்து சிவபெருமானை வழிபட்டால், மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம். 48 ஆண்டுகள் தொடர்ந்து பங்குனி உத்திரத் திருநாளில் விரதமிருந்து வழிபட்டால், அடுத்த பிறவியில் தெய்வநிலையை அடைவார்கள் என்பதும் ஐதீகம்.
இந்த மங்களகரமான பங்குனி உத்திரத் திருநாளில் இறைவனை வழிபட்டு சகல நன்மைகளையும் பெறுவோம்.