பொள்ளாச்சி பாலியல் கொடூரம்: காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன்

Read Time:1 Minute, 56 Second

பொள்ளாச்சி பாலியல் கொடூரம் விவகாரத்தில் காங்கிரஸ் செயல் தலைவர் மயூரா ஜெயக்குமாருக்கு சிபிசிஐடி போலீஸ் சம்மன் அனுப்பியது.

பொள்ளாச்சியில் கல்லூரி மாணவிகளை ஆசை வார்த்தை கூறி அழைத்து சென்று பாலியல் பலாத்காரம் செய்ததாக பொள்ளாச்சியை அடுத்த சின்னப்பம்பாளையத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (வயது 27) மற்றும் அவனது கூட்டாளிகளான சபரிராஜன்(25), சதீஷ்(29), வசந்தகுமார்(24) ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கோவை சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பொள்ளாச்சியில் பல இளம்பெண்களுக்கு நடைபெற்ற பாலியல் கொடூரம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட 4 பேரின் நீதிமன்றக் காவலை ஏப்ரல் 2 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருநாவுக்கரசுவிடம் சிபிசிஐடி போலீஸார் 4 நாட்கள் விசாரணை நடத்தியதன் அடிப்படையில், கோவை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராகவும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி செயல்தலைவராகவும் உள்ள மயூரா ஜெயக்குமார் வரும் 25-ம் தேதிக்குள் ஆஜராகும்படி சிபிசிஐடி போலீஸார் வியாழக்கிழமை சம்மன் அனுப்பியுள்ளனர்.

முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு, மயூரா ஜெயகுமாரை சந்திக்க சென்றதாக வாக்குமூலம் அளித்துள்ளான் என்று தகவல் வெளியாகியுள்ளது.