பொள்ளாச்சி சம்பவம்: திருநாவுக்கரசு யாரென்றே எனக்கு தெரியாது – மயூரா ஜெயக்குமார்

Read Time:2 Minute, 6 Second

பொள்ளாச்சி சம்பவம் தொடர்பாக விசாரணையை மேற்கொண்டுவரும் சிபிசிஐடியிடம் என்னுடைய அறிக்கையை கொடுத்துள்ளேன் என மயூரா ஜெயக்குமார் கூறியுள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் பலாத்காரம் சம்பவத்தில் முக்கிய குற்றவாளியான திருநாவுக்கரசு வழங்கிய வாக்குமூலம் தொடர்பாக விசாரிக்க சிபிசிஐடி போலீஸ், காங்கிரஸ் செயல் தலைவர் ஜெயக்குமாருக்கு சம்மன் வழங்கியது. இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மயூரா ஜெயக்குமார், திருநாவுக்கரசு யாரென்றே தெரியாது. சம்பவம் நடந்ததாக சொல்லப்படும் பிப்ரவரி 12-ம் தேதி பொள்ளாச்சியில் இல்லையென்றும், கோவை மாவட்ட காங்கிரஸ் அலுவலகத்தில் தந்தையுடன் திருநாவுக்கரசு எனக்கு வாழ்த்து தெரிவிக்க வந்ததாக சிபிசிஐடி விசாரணையில் கூறியுள்ளார்.

அதனடிப்படையில் எனக்கு சம்மன் வழங்கப்பட்டது. ஆனால் எனக்கு திருநாவுக்கரசை தெரியாது. சிபிசிஐடி புகைப்படம் காண்பிக்கும் போதுதான் எனக்கு திருநாவுக்கரசை தெரியும். எனக்கு எந்த விதத்திலும் தொடர்பு கிடையாது என்றார்.

ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய மயூரா ஜெயக்குமார், சம்பவம் நடந்த தினம் குற்றவாளி என்னுடைய அலுவலகத்தில் இருந்தாரா? என்பதை தெரிந்துக்கொள்ள சிபிசிஐடி போலீசார் சம்மன் விடுத்தனர். அதனை தவிர்த்து வேறு எந்த கேள்வியையும் என்னிடம் கேட்கவில்லை. என்னுடைய எழுத்துப்பூர்வமான அறிக்கையை வழங்கியுள்ளேன், அதிகாரிகள் என்னை அழைக்கும் போதெல்லாம் எந்த தகவலையும் வழங்க தயாராக உள்ளேன் என கூறியுள்ளார்.