தேர்தல் அறிக்கைகளில் நீட் தேர்வு விவகாரம்: தமிழிசை குழப்பம்…

Read Time:3 Minute, 4 Second

2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு திமுக, அதிமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் முக்கியமாக இடம்பெற்று இருப்பது நீட் தேர்வாகும். திமுக தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என சொல்லப்பட்டுள்ளது. அதிமுக தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வுக்கு விலக்கு அளிக்க வலியுறுத்தப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது. தேர்தல் அறிக்கையில் கூறுவதை எல்லாம் அரசியல் கட்சிகள் நிறைவேற்றுகிறதா? என்ற கேள்வி தொடரும் நிலையில், நீட் தேர்வை பொறுத்தவரையில் திமுக எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தியது.

அதிமுக அதனால் முடிந்தவரையில் உச்சநீதிமன்றம் வரையில் சென்றது. ஆனால் பலன் அளிக்கவிலை. இப்போது அரசு தரப்பில் மாணவர்களுக்கு நீட் தேர்வுக்காக பயிற்சி அளிக்கப்படுகிறது. இந்த தேர்தலை பா.ஜனதா, அதிமுகவுடன் கூட்டணி அமைத்து எதிர்க்கொள்கிறது. நீட் தேர்வு விவகாரத்தில் பொய்யான பிரசாரம் திமுக தரப்பில் செய்யப்படுகிறது என குற்றம் சாட்டும் பா.ஜனதா, அதிமுகவின் தேர்தல் அறிக்கையை கவனிக்க தவறிவிட்டதா? என்ற கேள்வி எழுகிறது. திமுக பொய்யான தேர்தல் அறிக்கையை அளித்துள்ளது, நினைவாற்றலுடன் ஸ்டாலின் இருக்கிறாரா? என கேள்வி எழுப்பிய தமிழிசை குழப்பத்தில் பேசியுள்ளார் என்பதும் தெரிகிறது.

பாஜக தமிழக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், நீட் தேர்வு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பாகும். உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எப்படி ஸ்டாலின் மாற்ற முடியும்? நமது விருப்பம் கிராமபுற மாணவர்களுக்கு பலன்தர வேண்டும். ஆனால், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை எப்படி மாற்ற அமைக்க முடியும்? சட்டரீதியாக முடியுமா? முடியாதா? என்றெல்லாம் யோசிக்காமல் எதையாவது மக்களுக்கு சொல்வோம் என கூறியுள்ளனர். திமுக தேர்தல் அறிக்கை முற்றிலும் ஒரு பொய்யான அறிக்கையாகும் என பேசியுள்ளார்.

அதிமுகவின் தேர்தல் அறிக்கையிலும் நீட் தேர்வு விவகாரம் இடம்பெற்றுள்ள நிலையில் பா.ஜனதா விமர்சனம் செய்கிறது. இப்போது தேர்தல் அறிக்கை விவகாரத்தில் கூட்டணி கட்சிகளுக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் விவகாரத்தில் அதிமுக தோல்வியை தழுவிவிட்டதா? என்ற கேள்வியும் எழுகிறது.