இந்தியாவில் தாக்குதல்: ‘உங்களுடைய நிலையை மோசமாக்கும்…!’ பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

Read Time:2 Minute, 25 Second

இந்தியாவில் மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால் உங்களுடைய நிலை மிகவும் சிக்கலாகும் என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

40 சிஆர்பிஎப் வீரர்கள் கொல்லப்பட்டதை அடுத்து பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இதனையடுத்து இருநாடுகள் இடையே போர் பதற்றம் நிலவியது. பின்னர் சர்வதேச நாடுகளின் அழுத்தம் காரணமாக பதற்றம் தணிந்தது. “பாகிஸ்தான் பயங்கரவாதம் மீது நடவடிக்கை எடுக்காததால் நாங்கள் எடுத்தோம், இனியும் எடுக்கவில்லை என்றால் இது தொடரும்,” என்ற வலுவான செய்தியை பாகிஸ்தானுக்கு இந்தியா கூறிவிட்டது.

இந்நிலையில் இந்தியாவில் மற்றொரு பயங்கரவாத தாக்குதல் நடந்தால் நிலை மிகவும் சிக்கலாகும் என பாகிஸ்தானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது.

இப்பிராந்தியத்தில் மீண்டும் பதற்றமான நிலை ஏற்படக்கூடாது என்றால் பாகிஸ்தான் பயங்கரவாத குழுக்கள் மீது குறிப்பாக லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத இயக்கங்கள் மீது ஸ்திரமான நடவடிக்கையை உறுதிசெய்ய வேண்டும். பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் மேலும் ஒரு தாக்குதல் இந்த பயங்கரவாத இயக்கங்களால் மேற்கொள்ளப்பட்டால் பாகிஸ்தானுக்கு நிலைமை மிகவும் மோசமாகும். பதற்றம் அதிகரிக்க கூடும். இருநாடுகளுக்கும் ஆபத்தாக இருக்கும் என அமெரிக்காவின் வெள்ளை மாளிகை நிர்வாக அதிகாரி எச்சரித்து உள்ளார்.

பாகிஸ்தானில் பயங்கரவாத குழுக்கள் இன்னும் செயல்படுகிறது, அந்த அமைப்புகளின் தலைவர்கள் நாடு முழுவதும் பயணம் செய்கிறார்கள், பிரசாரம் மேற்கொள்கிறார்கள் இது நல்லது கிடையாது. பாகிஸ்தான் நடவடிக்கையை எடுக்க வேண்டும் என்று அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.