அத்வானியின் மக்களவை பயணத்தை முடிவுக்கு கொண்டுவந்தது பா.ஜனதா…!

Read Time:3 Minute, 27 Second

பா.ஜனதா அத்வானியின் மக்களவை பயணத்தை முடிவுக்கு கொண்டு வந்துவிட்டது என்பது தெளிவாகியுள்ளது.

பா.ஜனதாவில் மூத்த தலைவர்களுக்கு மதிப்பில்லை என காங்கிரஸ் குற்றம் சாட்டிவரும் நிலையில், பா.ஜனதாவின் வேட்பாளர் பட்டியலில் அத்வானியின் பெயர் இடம்பெற வில்லை. அத்வானிக்கு இப்போது வயது 91. ஏற்கனவே பா.ஜனதா வேட்பாளர்களின் வயது வரம்பு கவனத்தில் கொள்ளப்படும் என தகவல் வெளியாகியது. பின்னர் வெற்றி பெறுபவர்களுக்கு முன்னுரிமை எனவும் தகவல் வெளியாகியது.

பா.ஜனதா தேசிய தலைவரான அமித்ஷா மாநிலங்களவை எம்.பி.யாக உள்ளார். அவர் இப்போது மக்களவை தேர்தலில் போட்டியிடுகிறார். குஜராத் மாநிலம் காந்திநகர் தொகுதியில் போட்டியிடுகிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. 1998-ம் ஆண்டில் இருந்து அத்வானி இத்தொகுதியில் இருந்து எம்.பி.யாக இருந்து வருகிறார். இப்போது அமித்ஷாவிற்கு செல்கிறது. கடந்த 1990களில் பாஜக சார்பில் ரதயாத்திரை நடத்தி நாடுமுழுவதும் பெரும் ஆதரவு அலையை திரட்டிய எல்கே அத்வானியை காந்தி நகரில் போட்டியிட செய்தது நரேந்திர மோடிதான். கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காந்திநகரில் போட்டியிட்ட அத்வானி, 4.83 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். அதனால், காந்திநகர் தொகுதியில் இந்த முறையும் அத்வானி போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மறுக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பு பா.ஜனதாவில் உள்ள மூத்த அரசியல் பண்டிதர்களுக்கு இரண்டு தெளிவான செய்திகளை கொடுக்கிறது. அத்வானி தன்னை தேர்தல் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவிக்கவில்லை, ஆனால் அவர் ஓய்வு பெற்றுவிட்டார். இரண்டாவது அவருக்கு பதில் அமித்ஷாவை மாற்றுவதன் மூலம் கட்சியின் அரசியல் வாரிசாக நியமிக்கப்பட்டுள்ளார் என்பதுதான்.

அத்வானி மட்டுமல்லாமல் மூத்த தலைவர் பி.சி. கந்தூரி, கல்ராஜ் மிஸ்ரா, பகத்சிங் கோஷ்யாரி ஆகியோருக்கம் சீட் வழங்கப்படவில்லை. அதேபோல 2014-ம் ஆண்டு தேர்தலில் போட்டியிட்டு வென்ற முரளி மனோகர் ஜோஷிக்கும் இந்த தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படும் என்பதற்கு உத்தரவாதம் இல்லை. அமித்ஷா அறிவிக்கப்பட்டதும் காந்திநகரில் பட்டாசு வெடித்துக் கொண்டாடப்பட்டுள்ளது. குஜராத்தில் பா.ஜனதாவிற்கு காங்கிரஸ் கடுமையான போட்டியை கொடுக்கும் நிலையில் அமித்ஷாவின் வருகை பலமாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. இதற்கிடையே அத்வானிக்கு சீட் விவகாரம் தொடர்பாக ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் ஏற்கனவே அவரிடம் எடுத்துரைத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.