சாத்தூரில் எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணுக்கு பிறந்த குழந்தைக்கு பாதிப்பு இல்லை என தகவல்

Read Time:2 Minute, 59 Second

சாத்தூரில் எச்ஐவி ரத்தம் ஏற்றப்பட்ட கர்ப்பிணிக்கு பிறந்த குழந்தைக்கு பாதிப்பு இல்லை என அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்குச் சென்ற கர்ப்பிணி பெண்ணுக்கு எச்.ஐ.வி பாதிப்புள்ள ரத்தத்தை ஏற்றியது வெளியாகி கடந்த ஆண்டு இறுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து மாவட்டம் முழுதும் உள்ள ரத்த வங்கிகளை சோதிக்க அரசு உத்தரவிட்டது.

ஜனவரியில் அந்தப் பெண்ணுக்கு பிரசவ நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதுவரை அவருக்கு கூட்டு மருத்துவ சிகிச்சை அளித்து எச்.ஐ.வி பாதிப்பு இல்லாத குழந்தையை அவர் பெற்றெடுக்கத் தேவையான உதவிகள் செய்யப்படும் என சுகாதாரத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. அதன்படி மதுரை மருத்துவமனையில் பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த ஜனவரி 17-ம் தேதி அப்பெண்ணுக்கு அழகான குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்து 46 நாட்கள் ஆன பின்னர் மார்ச் 4-ம் தேதி ரத்த மாதிரி சென்னை ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டது. ஆய்வில் குழந்தைக்கு பாதிப்பு இல்லை என்று துல்லியமாக தெரியவந்துள்ளது. “வழக்கமாக இதுபோன்ற சம்பவங்களில் குழந்தை பிறந்து 6 வாரங்கள் ஆன பின்னர் பரிசோதனையை மேற்கொள்வோம். இப்போதும் அதன் படியே செய்தோம். குழந்தைக்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லை,” என சுகாதாரத் துறை அதிகாரி கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் குழந்தைக்கு 6-வது மாதமும், ஒன்றரை வயதிலும் பரிசோதனை செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்போது தாயும், குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளனர், விரைவில் வீட்டிற்கு அனுப்பப்படுவார்கள் என மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்ணின் கணவர் பேசுகையில், என்னுடைய மனைவியின் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்பது மிகவும் கவலையை ஏற்படுத்துகிறது. என்னுடைய குழந்தைக்கு பாதிப்பு இல்லையென கூறியுள்ளார்கள். மற்ற பரிசோதனைகளிலும் பாதிப்பு இல்லையென்றே இருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். பாதிப்பு இருக்காது என்று மருத்துவர்களும் கூறியுள்ளனர்.