பா.ஜனதா ஆட்சியில் ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் போக்கு அதிகமாகியுள்ளது – தமிழச்சி தங்கபாண்டியன்

Read Time:3 Minute, 1 Second

பா.ஜனதா ஆட்சியில் ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் போக்கு அதிகமாகியுள்ளது என தமிழச்சி தங்கபாண்டியன் குற்றம் சாட்டியுள்ளார்.

திமுகவின் தென் சென்னை வேட்பாளராக தமிழச்சி தங்கபாண்டியன் அறிவிக்கப்பட்டுள்ளார். திமுக வேட்பாளர்கள் பட்டியலில் இடம்பெற்ற வாரிசுகளில் இவரும் ஒருவர். அவரது தந்தை தங்கபாண்டியன், சகோதரர் தங்கம் தென்னரசு ஆகியோரின் வழியில் வாரிசு அரசியல் காரணமாகவே அவருக்கு இந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. வாரிசுக்கள் என்பதற்காக தேர்தலில் போட்டியிடக்கூடாதா? என்ற கேள்விதான் அவர்கள் தரப்பில் எழுப்பப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழச்சி தங்கபாண்டியன் விளக்கங்களையும் கொடுத்து வருகிறார். தமிழ் இந்து பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், ஆமாம். திமுக குடும்ப அரசியல், வாரிசு அரசியல் தான் செய்கிறது. திமுக மிகப்பெரிய குடும்பம். நாங்கள் வாரிசு தான் என பெருமையாக சொல்வோம். அப்படியே வாரிசு அரசியல் என வைத்துக் கொண்டாலும், அத்தனை தகுதிகளுடன் படித்து, கட்சிப் பணியாற்றி தான் வந்திருக்கிறோம். கட்சியில் தொடர்ந்து பணியாற்றிதான் வருகிறோம் என கூறியுள்ளார்.

மத்திய பா.ஜனதா அரசின் செயல்பாடு தொடர்பாக பேசுகையில், ஜனநாயகத்தின் குரல் வளையை நெறிக்கும் போக்கு அதிகமாகியுள்ளது. எல்லா விதத்திலும் கருத்துச் சுதந்திரம் பறிபோய் விட்டது. எதிர்கருத்தாளர்கள் கொல்லப்படுகின்றனர். அரசு நிறுவனங்கள் எல்லாம் சிதைக்கப்படுகிறது. ஜிஎஸ்டி, பணமதிப்பு நீக்கம் வந்த பிறகு சிறு வணிகர்கள் காணாமல் போய் விட்டனர். இதனால், அண்ணாச்சி கடை அண்ணன், கீரைக்கார அம்மாவுக்கு ஏற்பட்ட இழப்புகளின் வலி எனக்குதான் தெரியும். இதையெல்லாம் நாங்கள் மக்களிடத்தில் கொண்டு செல்வோம் என கூறியுள்ளார்.

திமுக இந்து மதத்திற்கோ, இந்துக்களுக்கோ எதிரானது கிடையாது. எனக்கு சிறுதெய்வ வழிபாட்டில் நம்பிக்கை உள்ளது. அது, மூடப்பழக்கமாக மாறும்போது அதனை நாங்கள் எதிர்ப்போம். பா.ஜனதா எதிர்ப்பதென்பது, இந்துக்களை எதிர்ப்பதாகாது. நாங்கள் கடவுள் மறுப்பாளர்கள் தானே தவிர வெறுப்பாளர்கள் அல்ல. யாருடைய மத நம்பிக்கைகளிலும் திமுக குறுக்கிடுவது இல்லை என்று கூறியுள்ளார்.