பா.ஜனதாவில் அரசியல் இன்னிங்சை தொடங்கிய கவுதம் கம்பீர்…

Read Time:3 Minute, 20 Second

முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் கம்பீர் பா.ஜனதாவில் இணைந்துள்ளார்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் கவுதம் கம்பீர் தேசப்பற்று விஷயங்களிலும், சமூக பிரச்சினைகளிலும் அதிகமாக நாட்டம் கொண்டவர். எல்லையில் பல்வேறு பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களின் குழந்தைகளுக்காக நல திட்டங்களையும் முன்னெடுத்து வருகிறார். அவர்களுடைய கல்வி செலவையும் ஏற்றுக்கொள்கிறார். இதனால் பலருடைய பாராட்டுக்களையும், நன்மதிப்புகளையும் பெற்றுள்ளார். இவரையும், வீரேந்திர சேவாக்கையும் கட்சியில் இணைக்க பா.ஜனதா முயற்சியை மேற்கொண்டது. வீரேந்திர சேவாக் அழைப்பை புறக்கணித்துவிட்டார். புல்வாமா தாக்குதலை அடுத்து கம்பீர் பா.ஜனதாவிற்கு ஆதரவாக பேசும் நிலை காணப்பட்டது. பத்மஸ்ரீ விருதும் கம்பீருக்கு வழங்கப்பட்டது. இந்நிலையில் அவர் பா.ஜனதாவில் அரசியல் இன்னிங்சை தொடங்கியுள்ளார். கவுதம் கம்பீர் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி முன்னிலையில் பாஜகவில் முறைப்படி இணைந்தார். கம்பீருக்கு பூங்கொத்து கொடுத்து அருண் ஜேட்லி வரவேற்றார்.

கட்சியில் இணைந்த பின்னர் தேசிய தலைவர் அமித்ஷாவை சந்தித்து பேசினார்.

கம்பீர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரதமர் மோடியின் செயல்பாடுகள், நிர்வாகம், திட்டங்களால் நான் வெகுவாக ஈர்க்கப்பட்டு பா.ஜனதாவில் இணைந்தேன். எனக்கு இந்த வாய்ப்பை வழங்கியதற்கு பெருமைப்படுகிறேன். நாட்டை முன்னேற்ற சிறப்பாக பணியாற்றுவேன், நாட்டை வாழ்வதற்கு சிறப்பானதாக மாற்றுவேன்,” என குறிப்பிட்டார்.

தேர்தலில் போட்டி?

கவுதம் கம்பீர் பா.ஜனதா சார்பில் புது டெல்லி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடலாம் என தகவல்கள் வெளியாகியது. இப்போது அத்தொகுதி பா.ஜனதா எம்.பி. மீனாட்சி லேகியிடம் உள்ளது. ஆனால் கம்பீர் போட்டியிடுகிறாரா? என்ற கேள்விக்கு அருண் ஜெட்லி பதில் அளிக்கவில்லை. இருப்பினும் கம்பீர் டெல்லியில் உள்ள 7 தொகுதியில் ஒரு தொகுதியில் போட்டியிடலாம் என்றே பார்க்கப்படுகிறது.

கிரிக்கெட் வீரராக வாக்களிக்க வேண்டாம்…

கம்பீர் சமீபத்தில் இணையதள பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில் ஒரு கிரிக்கெட் வீரராக நினைத்து எனக்கு வாக்களிக்க வேண்டாம். என்னால் மக்களுக்காக நற்பணிகளை செய்ய முடியும், செய்வேன் என்று நம்பிக்கை வைத்தால் வாக்களியுங்கள் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.