இப்படியும் ஒரு முதல்வர்… எந்தஒரு பின்புலமும் இல்லாத பெண்ணை வேட்பாளராக அறிவித்தார்…!

Read Time:3 Minute, 53 Second

ஒடிசா மாநில முதல்வர் நவீன் பட்நாயக் எந்தஒரு பின்புலமும் இல்லாத பெண்ணை வேட்பாளராக அறிவித்துள்ளார்.

ஒடிசாவில் ஆளும் கட்சியான நவீன் பட்நாயக்கின் பிஜு ஜனதா தளம் தரப்பில் அஸ்கா தொகுதியில் 68 வயது பிரமிளா பிசோய் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளார். இந்த தொகுதி ஒடிசாவில் மிகவும் முக்கியமான தொகுதியாகும். முதல்வர் நவீன் பட்நாயக் 20 ஆண்டுகளுக்கு முன் தனது அரசியல் பயணத்தை தொடங்கியது. இவரது தந்தை பிஜு பட்நாயக்கும் தேர்வு செய்யப்பட்ட தொகுதியாகும். இப்போது அஸ்கா தொகுதிக்கான வேட்பாளராக மகளிர் சுயஉதவிக் குழு தலைவி பிரமிளா பிசோயை நிறுத்தியுள்ளார். அவர் மூன்றாம் வகுப்பு வரையில் படித்தவர்.

பிரமிளா பிசோய், 18 ஆண்டுகளாக மகளிர் சுயஉதவிக் குழுவில் எழுத்தறிவு, சுற்றுப்புற சுகாதாரம், குழந்தை களுக்கு தடுப்பூசி, மருத்துவமனையில் பிரசவிக்க வேண்டியதன் அவசியம் மற்றும் இயற்கை பாதுகாப்பு போன்ற சமூக நலப்பணிகளை மேற்கொண்டு வருகிறார். அவருக்கு ஒரு ஏக்கருக்கும் குறைவான நிலம் மட்டுமே உள்ளது. அதில் கணவருடன் சேர்ந்து தனது நிலத்தில் நெல், ராகி பயிரிட்டு வருகிறார். இதனால் ரூ.10 ஆயிரம் முதல் 12 ஆயிரம் வரை மட்டுமே இவர்களின் மாத வருமானம் ஆகும்.

பிரமிளா முயற்சியால் இவரது கிராமம் திறந்தவெளி கழிப்பிடம் இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் வேட்பாளராக நியமனம் செய்யப்பட்டது பலராலும் பாராட்டப்பட்டு வருகிறது. ஒடிசாவில் பெண்களுக்கு முன்னுரிமை அளிப்பதில் முக்கியத்துவம் காட்டும் பட்நாயக், உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீட்டை அறிமுகம் செய்தார். பின்னர் 50 சதவீதமாக உயர்த்தினார். இப்போதைய தேர்தலிலும் கட்சி சார்பில் 33 சதவீத இடங்களில் பெண் வேட்பாளர்கள் நிறுத்துகிறார். செல்வந்தர்களையும், வாரிசுகளை மட்டும் வேட்பாளர் பட்டியலில் பார்க்கும் நமக்கு இது கொஞ்சம் ஆச்சர்யமாகதான் தெரியும்.

பிரமிளா பிசோயை வேட்பாளராக அறிவித்தது குறித்து நவீன் பட்நாயக் பேசுகையில், பெண்கள் அதிகாரம் பெற எங்கள் மாநிலத்தில் ‘மிஷன் சக்தி’ இயக்கத்தை 18 ஆண்டுகளுக்கு முன் தொடங்கினோம். இப்போது 70 லட்சம் பெண்களுடன் மிகப்பெரிய இயக்கமாக வளர்ச்சி அடைந்துள்ளது. எங்கள் ‘மிஷன் சக்தி’ இயக்கத்தில் உள்ள லட்சக்கணக்கான பெண்களை கவுரவிக்கும் வகையில் பிரமிளா பிசோயை அஸ்கா தொகுதி வேட்பாளராக அறிவித்துள்ளேன். 20 ஆண்டுகளுக்கு முன் நான் எனது அரசியல் பயணத்தை தொடங்கிய அஸ்கா தொகுதியே அவருக்கு தற்செயலாக அமைந்துவிட்டது என கூறியுள்ளார்.

பிரமிளா பேசுகையில், இது நவீன் பட்நாயக் கொடுத்த பரிசாகும். இதனை நான் கனவிலும் நினைக்கவில்லை. பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதில் நவீன் பட்நாயக் கொடுக்கும் ஊக்குவிப்பு மற்றும் செயல் என்னை வலிமையடைய செய்துள்ளது. எல்லோரும் வளர்ச்சியடைய என்னுடைய பணி தொடர்ந்து நடைபெறும் எனக் கூறியுள்ளார்.