ஓலா-விற்கு அனுமதியை கர்நாடக அரசு உடனடியாக ரத்து செய்தது ஏன்?

Read Time:2 Minute, 2 Second

பெங்களூருவில் ஓலா கார் சேவையை உடனடியாக நிறுத்துமாறு கர்நாடக போக்குவரத்து துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.

கர்நாடக அரசுப் போக்குவரத்து துறை திங்கள் கிழமை வெளியிட்ட உத்தரவில், ஆனி டெக்னாலஜிஸ், ஓலா பெங்களூரு நிறுவனத்துக்கு அளித்த உரிமம் 6 மாத காலத்துக்கு ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உத்தரவின் நகல் கையில் கிடைத்த 3 நாட்களுக்குள் ஓலா தனது உரிமத்தை அரசிடம் சமர்ப்பிக்க வேண்டும். இன்றுவரையில் ஓலா அங்கு ஓடிக்கொண்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெங்களூருவில் மொபைல் ஆப் அடிப்படையிலான கார் சேவைகளை நடத்தவே ஓலாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால் ஓலா அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக பைக் டாக்ஸிக்களை ஓட்டியுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதுதொடர்பாக நோட்டீஸ் விடுத்தும் ஓலா தரப்பில் திருப்திகரமான பதிலை அளிக்கவில்லை என கூறப்படுகிறது. இதனையடுத்து பைக் டாக்ஸிக்களை ஓட்டியது விதிமுறைகளுக்கு எதிரானது. இது தொடர்பாக கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. விதிகளின் படி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கர்நாடக போக்குவரத்து துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே 260 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறி ஓலா டாக்ஸிக்கள் ஓடினால் நடவடிக்கை எடுக்குமாறு ஆர்டிஓ-க்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஜூன் 2016 முதல் ஜூன் 19, 2021 வரையில் அனுமதி பெற்றுள்ளதாக ஓலா தெரிவித்துள்ளது.