‘நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா மகாபிரபு’…! காங்கிரசுக்கு மேலும் நெருக்கடி

Read Time:1 Minute, 37 Second

மராட்டியத்தில் காங்கிரஸ் கூட்டணிக்கு நெருக்கடியாக சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கூட்டணி போட்டியிடுவதாக அறிவித்துள்ளது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரபிரதேசத்தில் சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கூட்டணி வைத்துள்ளது. காங்கிரஸை அக்கட்சிகள் கூட்டணியில் சேர்க்கவில்லை. உ.பி.யை அடுத்து 48 தொகுதிகளைக் கொண்ட மராட்டியம் முக்கிய மாநிலமாக பார்க்கப்படுகிறது. மராட்டியத்தில் பா.ஜனதா, சிவசேனா கூட்டணி உறுதியாகிவிட்டது. காங்கிரசும், தேசியவாத காங்கிரசும் மறுபுறம் கூட்டணி அமைத்துள்ளது. இருதரப்பு இடையேயும் கடுமையான போட்டி நிலவும் என பார்க்கப்பட்டது.

இந்நிலையில் மராட்டியத்தில் காங்கிரசுக்கு மற்றொரு தலைவலியாக மாயாவதி – அகிலேஷ் கூட்டணி இங்கேயும் வந்துவிட்டது. மராட்டியத்திலும் சமாஜ்வாடி – பகுஜன் சமாஜ் கூட்டணி இணைந்து போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டணி அங்கு காங்கிரஸ், பா.ஜனதாவிற்கு எதிரான நிலைக்கொண்ட அமைப்புகளை தன்வசம் இழுத்து வருகிறது. இதனால் காங்கிரசுக்கான வாக்குகளை இக்கூட்டணி பிரிக்கும் என்றே கூறப்படுகிறது. இதனால் காங்கிரசுக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது.