10 தொகுதிகளை வாங்கிவிட்டு விழிக்கும் காங்கிரஸ்…! இடியாப்ப சிக்கலில் வேட்பாளர்கள் போட்டி

Read Time:2 Minute, 57 Second

நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் விரைவில் வெளியாக வாய்ப்பு இருக்கிறது.

நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் (தனி), கிருஷ்ணகிரி, ஆரணி, கரூர், திருச்சி, சிவகங்கை, தேனி, விருதுநகர், கன்னியாகுமரி ஆகிய 9 தொகுதிகளிலும், புதுச்சேரியிலும் போட்டியிடுகிறது. பிறகட்சிகள் வேட்பாளர்களை அறிவித்த நிலையில், காங்கிரசின் உத்தேச பட்டியல் தலைமைக்கு சென்றது. டெல்லியில் உள்ள முக்கிய தலைவர்களை தொடர்பு கொண்டு தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் ‘சீட்’ கேட்டு வருவதால், வேட்பாளர்கள் பட்டியல் வெளியாவதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

தொகுதிகளை கேட்டு வாங்கியதில் மாநில தலைமைக்கும், மத்திய தலைமைக்கும் இடையே ஒருமித்த கருத்து இல்லையென கூறப்படுகிறது. 10 தொகுதிகளை வாங்கிவிட்டு யாருக்கு கொடுப்பது, யாரை நிறுத்தினால் வெற்றி வாய்ப்பு என்ற விவகாரத்தில் காங்கிரஸ் விழிபிதுங்கி நிற்பதே தெரிகிறது. கரூர் மற்றும் கிருஷ்ணகிரியில் வலுவான வேட்பாளர் இல்லாவிட்டாலும் காங்கிரஸ் பிடிவாதமாக இந்த தொகுதிகளை கேட்டு வாங்கியதாக பேசப்படுகிறது.

இதே போன்று பிற தொகுதிகளிலும் நாளுக்கு நாள் போட்டிகள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக திருச்சியில் முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் குஷ்புவும் அதே தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கேட்டு வருவதால் இழுபறி நீடிக்கிறது என கூறப்படுகிறது.

கரூர் தொகுதியில் ஜோதிமணி போட்டியிடுவார் என்று கூறப்பட்ட நிலையில், தற்போது பேங்க் சுப்பிரமணியன் பெயரும் அடிபடத் தொடங்கியுள்ளது. சிவகங்கை தொகுதியில் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் வேட்பாளராக களம் இறக்கப்படுவார் என்று கூறப்பட்டது. ஆனால் இப்போது அவர் மீதான வழக்குகளை காரணம் காட்டி கட்சித் தலைமை யோசிப்பதாக தெரிகிறது. இவ்வளவு சிக்கல்களுக்கு இடையே காங்கிரஸ் தலைமை வேட்பாளர் பட்டியலை வெளியிட உள்ளது.