விமானப்படை தாக்குதல் விவகாரம்; பிரதமர் மோடியின் காட்டமும்… காங்கிரஸ் பதிலும்…

Read Time:3 Minute, 27 Second

விமானப்படை தாக்குதல் விவகாரம் தொடர்பாக கடுமையாக விமர்சனம் செய்த பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் பதிலளித்துள்ளது.

இந்திய விமானப்படை பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை அழித்தது, 300க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்தனர் என பா.ஜனதா தலைவர்கள் பேசினர். ஆனால் விமானப்படை தரப்பில் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. எங்களுக்கு கொடுத்த பணியை, துல்லியமாக தாக்குதல் நடத்தி முடித்தோம் என்றது. எதிர்க்கட்சிகளும் பல்வேறு கேள்விகளை எழுப்பியது. பா.ஜனதாவின் கூட்டணி கட்சியான சிவசேனா, விமானப்படை தாக்குதலில் பலியான பயங்கரவாதிகள் எண்ணிக்கையை தெரிந்து கொள்ள மக்களுக்கு உரிமை உள்ளது என்றது.

இவ்விவகாரம் சற்று மறைந்திருந்த நிலையில் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய போர் விமானங்கள் தாக்கிய விவகாரத்தை காங்கிரஸ் கட்சியின் வெளிவிவகாரங்களை கவனிக்கிற சாம்பிட்ரோடா மீண்டும் எழுப்பினார். பாலகோட்டில் விமானப்படை நடத்திய தாக்குதல்கள் குறித்து கூடுதலாக அறிந்த கொள்ள விரும்புகிறேன். அந்த தாக்குதலில எத்தனை பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்? என கேள்வியை எழுப்பினார்.

பிரதமர் மோடி காட்டம்

இதற்கு பிரதமர் மோடி மிகவும் காட்டமாக பதில் அளித்தார். ‘காங்கிரஸ் தலைவரின் ஆலோசகர் பாகிஸ்தான் தேசிய நாள் கொண்டாட்டத்தை ஆரம்பித்து வைத்துள்ளார். இந்திய ராணுவப் படைகளை அவமானப்படுத்தி அவர் இந்தக் காரியத்தைச் செய்துள்ளார். எதிர்கட்சிகள் நமது ராணுவப் படையை மீண்டும் மீண்டும் அவமானப்படுத்தி வருகின்றன. பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை தாக்கி அழித்ததை கேள்வி எழுப்பும் காங்கிரஸ் கட்சியை 130 கோடி இந்தியர்கள் மன்னிக்க மாட்டார்கள் என்று பிரதமர் மோடி காட்டமாக கருத்து வெளியிட்டார். இதற்கு காங்கிரஸ் பதிலளித்தது.

காங்கிரஸ் பதில்

‘தனிநபர் கருத்தை வைத்து வி‌ஷம் பரப்பாதீர்’ என பா.ஜனதாவுக்கு காங்கிரஸ் பதிலுரைத்துள்ளது.

காங்கிரஸ் கட்சியை ரன்தீப் சுர்ஜிவாலா டுவிட்டரில் வெளியிட்டுள்ள செய்திகளில், தனிநபரின் கருத்தை வைத்து வி‌ஷத்தை பரப்புவதை பிரதமர் நரேந்திர மோடியும், பாரதீய ஜனதா கட்சியும் நிறுத்திக்கொள்ள வேண்டும். நாட்டின் பாதுகாப்பு படைகளின் தியாகத்துக்கு பின்னால் ஒளிந்து கொண்டிருப்பதை விட்டு விட்டு, பெருகி வரும் வேலையில்லா திண்டாட்டம், விவசாயிகளின் துயரம், ரூபாய் நோட்டு மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி. பேரழிவு, பொருளாதார வீழ்ச்சி பற்றிய பிரச்சினைகளுக்கு பிரதமர் பதில் அளிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.