தென்னிந்தியாவில் போட்டியிட காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சம்மதம்…!

Read Time:3 Minute, 29 Second

நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளராக களமிறங்க ராகுல் காந்தி சம்மதம் தெரிவித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி உத்தரபிரதேச மாநில அமேதி தொகுதியில் போட்டியில் எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டு வருகிறார். இந்த நாடாளுமன்றத் தேர்தலிலும் அங்கு போட்டியிடுகிறார் என காங்கிரஸ் கட்சி ஏற்கனவே அறிவித்துவிட்டது. பா.ஜனதா சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி களமிறக்கப்பட்டுள்ளார். ஸ்மிருதி இரானி ஏற்கனவே ராகுல் காந்தியிடம் 2014-ம் ஆண்டு தோல்வியை தழுவியவர். இப்போதும் இருவர் இடையேயும் அங்கு போட்டி ஏற்படுகிறது. இந்நிலையில் புதிய தகவலாக ராகுல் காந்தி தென்னிந்தியாவில் போட்டியிட சம்மதம் தெரிவித்துவிட்டார் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்ற காங்கிரஸ் தொண்டர்கள் வலியுறுத்தினர். ஆனால் கன்னியாகுமரி தொகுதியில் வசந்தகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று கேரள காங்கிரஸ் தரப்பில் ராகுல் காந்தி கேரளாவில் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. கேரளாவின் வயநாடு தொகுதியில் ராகுல் காந்தி போட்டியிட வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்கள் வலியுறுத்தினர். இப்போது அங்கு போட்டியிட ராகுல் காந்தி சம்மதம் தெரிவித்துவிட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கேரள காங்கிரஸ் தலைவர் ராமசந்திரன் இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், “இதுதொடர்பாக ஒருமாத காலமாக பேச்சுவார்த்தை நடைபெற்றது. முதல்கட்டமாக ராகுல் காந்திக்கு விருப்பம் கிடையாது. பின்னர் தொடர்ச்சியான வலியுறுத்தல் காரணமாக சம்மதம் தெரிவித்துவிட்டார்,” என கூறியுள்ளார்.

கேரள மாநில காங்கிரஸ் பொதுச்செயலாளர் உம்மன் சாண்டி பேசுகையில், ராகுல் காந்தி இவ்விவகாரம் தொடர்பாக இன்று ராகுல் காந்தி பதில் தெரிவிக்கலாம். நாங்கள் கேரளாவில் போட்டியிட வேண்டும் என்று அவரை தொடர்ந்து கேட்டு வருகிறோம், வயநாடு தொகுதியையும் ஒதுக்கினோம் என குறிப்பிட்டுள்ளார்.

ஆனால் வயநாடு தொகுதிக்கு ஏற்கனவே டி சித்திக் வேட்பாளராக காங்கிரஸ் தரப்பில் அறிவிக்கப்பட்டுவிட்டார். சித்திக் பேசுகையில், ராகுல் காந்தி போட்டியிட்டால் எங்கள் மாநிலத்திற்கான பெருமையாகதான் இருக்கும். அதனால் போட்டியிலிருந்து விலகுவதற்கு நான் தயாராக உள்ளேன் என கூறியுள்ளார்.