இந்தியாவில் ரூ.8,100 கோடி வங்கி மோசடி செய்துவிட்டு தப்பிய ஹிதேஷ் படேல் அல்பேனியாவில் கைது

Read Time:3 Minute, 2 Second

இந்தியாவில் ரூ.8,100 கோடி வங்கி மோசடி செய்துவிட்டு தப்பிய ஹிதேஷ் படேல் அல்பேனியாவில் கைது செய்யப்பட்டார்.

குஜராத் மாநிலம் வதோதராவை தலைமையகமாக கொண்டு செயல்பட்ட ‘ஸ்டெர்லிங் பயோடெக்’ நிறுவனம் பொதுத்துறை வங்கிகளில் இருந்து ரூ.8,100 கோடி அளவுக்கு வங்கிக்கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டு உள்ளது. இவ்விவகாரம் தொடர்பாக அமலாக்கப்பிரிவு மற்றும் சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணையை மேற்கொண்டது. மோசடி தொடர்பாக ஸ்டெர்லிங் பயோடெக் நிறுவனத்தின் உரிமையாளர்களான சந்தேசரா (நிதின், சேத்தன்) சகோதரர்கள், மற்றும் அவர்களின் மைத்துனர் ஹிதேஷ் படேல் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் 300–க்கும் மேற்பட்ட போலி நிறுவனங்களும், பினாமி பெயரில் நிறுவனங்களும் பயன்படுத்தி மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இவர்கள் அனைவரும் இந்தியாவைவிட்டு வெளியேறிவிட்டனர்.

தப்பி ஓடிய இவர்களை இந்தியாவிற்கு கொண்டுவர அமலாக்கப்பிரிவு, இந்திய அரசு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. நிதின் சந்தேசரா, நைஜீரியாவில் இருப்பதாக கடந்த ஆண்டு இறுதியில் தகவல் வெளியாகியது. இதனையடுத்து அவரை கைது செய்து நாடு கடத்தி கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே முக்கிய குற்றவாளியான ஹிதேஷ் படேல், தென்கிழக்கு ஐரோப்பிய நாடான அல்பேனியாவில் சிக்கியுள்ளார். அமலாக்கப்பிரிவு கோரிக்கையை ஏற்று இன்டர்போல் நோட்டீஸ் விடுத்துள்ளது.

இதனை அடிப்படையாக கொண்டு அல்பேனியா அதிகாரிகள் ஹிதேஷ் படேலை கைது செய்து உள்ளனர்.

சந்தேசரா சகோதரர்கள் போலி நிறுவனங்கள் மற்றும் பினாமி பெயரில் நிறுவனங்களை உருவாக்குவதற்கு முக்கிய கருவியாக விளங்கியவர் ஹிதேஷ் படேல் ஆவார். எனவே இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக அவர் தேடப்பட்டார். விரைவில் இந்திய அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் அங்கு விரைகிறார்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய வங்கிகளில் மோசடி செய்த இந்த குரூப், அமெரிக்கா, இங்கிலாந்து, நைஜீரியா, ஐக்கிய அரபு எமிரெட்ஸ் உள்ளிட்ட நாடுகளில் தொழில் தொடங்கியுள்ளது. இந்த நிறுவனத்தின் சர்வதேச கணக்கு விபரங்களை அமலாக்கப்பிரிவு கண்காணிக்கிறது.