பா.ஜனதா என்னை மிரட்டுகிறது, போலியான செய்திகளை பரப்புகிறது – சித்தார்த் குற்றச்சாட்டு

Read Time:3 Minute, 39 Second

பா.ஜனதா என்னை மிரட்டுகிறது, போலியான செய்திகளை பரப்புகிறது என நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டியுள்ளார்.

நடிகர் சித்தார்த் பல்வேறு முக்கிய சம்பவங்களில் தன்னுடைய கருத்தை டுவிட்டரில் பதிவு செய்து வருகிறார். அரசியலையும் விடவில்லை. அரசியலிலும் தவறு என்று நினைப்பதை உடனடியாக டுவிட்டரில் வெளியிடுகிறார். வெறுப்பு பரப்பப்படுவதை விமர்சனம் செய்து வருகிறார். காங்கிரஸ், பா.ஜனதா என்ற இருகட்சிகளையுமே விமர்சனம் செய்கிறார். சமீபத்தில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம் ‘பிஎம் நரேந்திர மோடி’ டிரைலர் குறித்து கிண்டல் செய்தார்.

அவர் டுவிட்டரில் வெளியிட்ட செய்தியில், “பிரதமர்நரேந்திரமோடி ட்ரெய்லரைப் பார்க்கும்போது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்தை தனி ஆளாக எதிர்த்து நின்று சுதந்திரம் வாங்கித்தந்த மோடி குறித்து ஏன் காட்டவில்லை என்ற கேள்வி எழுகிறது. மதச்சார்பு கொண்ட நக்சல்களால் உருவாக்கப்பட்ட மோசமான உத்தியாக இருக்கிறது. #PMNarendraModi போன்ற வாழ்க்கை வரலாற்றுப் படங்களை உருவாக்கும் திரைப்பட இயக்குநர்களின் நேர்மையைப் பார்க்கும்போது என்னுடைய மனது குழம்புகிறது.

இந்த ட்ரெய்லரைப் பார்க்கும்போது ஜெயலலிதாவை அடிப்படையாகக் கொண்ட பல்வேறு படங்கள் எப்படி வரும் என்று தெரியவில்லை. உங்களுக்கு வரலாறு தெரியாமல் இருப்பதை மன்னித்துவிடலாம். ஆனால் வரலாற்றையே மாற்ற முயற்சிப்பதை மன்னிக்கவே முடியாது” என்று தெரிவித்தார். இதுபோன்று தொடர்ச்சியாக கருத்துக்களை பதிவு செய்கிறார். அவருக்கு எதிராக வரும் போலி செய்திகளுக்கும் பதில் அளிக்கிறார்.

இதற்கிடையே பா.ஜனதா என்னை மிரட்டுகிறது, போலியான செய்திகளை பரப்புகிறது என நடிகர் சித்தார்த் குற்றம் சாட்டியுள்ளார்.

“தேவைப்படும் போது அனைத்து பெரிய அரசியல் கட்சிகளுக்கு எதிராகவும் பேசி இருக்கிறேன். ஆனால் ஒரு தரப்பினரிடம் இருந்து மட்டுமே எனக்கு மிரட்டல்கள் வந்தன. அவர்கள் என் மீது வெறுப்பு காட்டினார்கள். தவறாக பேசியும் இழிவுபடுத்தினார்கள். தற்போது அவர்களில் பெரும்பாலானோர் தங்களை சவ்கிதார் என்று அழைத்துக்கொள்கின்றனர். பா.ஜனதா தொழில்நுட்ப பிரிவினர் இப்போதும் என்னை பற்றி போலியான செய்திகளை பரப்புவதை நான் படித்து வருகிறேன்.” என குறிப்பிட்டுள்ளார்.