சொத்து மதிப்பு உயர்வு; ராகுல் காந்தியின் வருமான ஆதாரம் எது? பா.ஜனதா கேள்வி

Read Time:1 Minute, 43 Second

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் சொத்து மதிப்பு உயர்ந்தது எப்படி? என பா.ஜனதா கேள்வி எழுப்பியுள்ளது.

அமேதி தொகுதியின் எம்.பி.யாக இருக்கும் ராகுல் காந்தி, தீவிர அரசியலில் இருந்து வருகிறார். அவருடைய சொத்து மதிப்பு கடந்த 2004–ம் ஆண்டில் ரூ.55 லட்சமாக இருந்த நிலையில், 10 ஆண்டுகளில் அதாவது 2014–ம் ஆண்டு ரூ.9 கோடியாக உயர்ந்துள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் செய்தியாளர்களிடம் பேசுகையில் காங்கிரசுக்கு கேள்விகளை எழுப்பியுள்ளார்.

2004–ம் ஆண்டு ரூ.55 லட்சமாக இருந்த அவரது சொத்து மதிப்பு 2009–ல் ரூ.2 கோடியாகவும், 2014–ம் ஆண்டு ரூ.9 கோடியாகவும் அதிகரித்து இருக்கிறது. இது ராகுல் காந்தி மாதிரி, வளர்ச்சியாக தெரிகிறது. நமக்கு தெரிந்தவரையில் அவருக்கு எம்.பி. சம்பளம் தவிர வேறு எதுவும் கிடையாது. ராகுல் காந்தியின் வருமான ஆதாரம் எது? என நாங்கள் அறிய விரும்புகிறோம். வெறும் ஒரு எம்.பி.யான ராகுல் காந்தியின் வருமானம் 10 ஆண்டுகளில் இந்த அளவுக்கு பெருகியது எப்படி? என்பதை பா.ஜனதா அறிய விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார் ரவிசங்கர் பிரசாத்.

இதேபோன்று நிலம் வாங்கப்பட்டது, பங்களா உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாகவும் பா.ஜனதா கேள்வியை எழுப்பியுள்ளது.