இந்தியாவின் மத்தியில் எஞ்சியிருக்கும் கடைசி காடும் அழிக்கப்படுகிறது…!

Read Time:11 Minute, 50 Second

170,000 ஹெக்டேர் அடர்வனப்பகுதியில் சுரங்கம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.

சத்தீஷ்கார் மாநிலத்தின் பார்சாவில் அடர்த்தியான ஹஸ்டியோ அரண்ட் வனப்பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கு மத்திய சுற்றுசூழல் அமைச்சகம் அனுமதியை வழங்கியுள்ளது. மத்திய அரசின் இந்த முடிவு வனப்பகுதி பாதுகாப்பிற்கான நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தக்கூடியது என சுற்றுசூழல் ஆர்வலர்கள் எச்சரிக்கிறார்கள்.

சத்தீஷ்காரில் பசுமையை மட்டுமே தனக்கென்ற அடையாளமாக தாங்கி நிற்கும் 170,000 ஹெக்டேர் அளவில் பரந்து காணப்படும் ஹஸ்டியோ அரண்ட் வனப்பகுதி மத்திய இந்தியாவில் உள்ள நீளமான மற்றும் அடர்த்தியான வனப்பகுதியாகும். கடந்த 2009-ம் ஆண்டு சுற்றுச்சூழல் அமைச்சகம் ஹஸ்டியோ அரண்ட் மிகவும் வளமான காட்டைக் கொண்டிருப்பதால் சுரங்கங்களுக்கு அனுமதி இல்லாத பகுதியாக அறிவித்திருந்தது. ஆனால் இரண்டு ஆண்டுகளிலேயே இந்த அறிவிப்பை தளர்த்திக் கொண்டு சுரங்கம் அமைக்க அனுமதி தொடங்கியது. இப்படி ஹாஸ்டியோ அரண்ட் காடுகளில் 30 நிலக்கரி தொகுதிகள் உள்ளன. இதில் ஒன்றுதான் பார்சாவாகும்.

இந்த சுரங்கம் ராஜஸ்தான் மாநில அரசின் மின்சார வாரிய நிறுவனமான ஆர்வியுஎன்எல்-க்கு Rajasthan Rajya Vidyut Utpadan Nigam Ltd (RVUNL) சொந்தமானது. நிலக்கரி சுரங்கம் வருடத்திற்கு 5 மெட்ரிக் டன்கள் (எம்டிபிஏ) உற்பத்திக்கான திறன் கொண்டது. இந்த சுரங்கத்தில் நிலக்கரியை வெட்டியெடுக்கும் வேலையை அதானி குழுமத்தின் துணை நிறுவனமான ராஜஸ்தான் காலியர்ஸ் லிமிடெட் (Rajasthan Collieries Limited) நிறுவனம் மேற்கொள்கிறது.

இந்த சுரங்கத்திற்கு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் காடுகள் ஆலோசனைக் குழு (Forest Advisory Committee (FAC)) முதற்கட்ட அனுமதியான ஆயத்த வன அனுமதியை (Preliminary Forest Clearance) பிப்ரவரியில் அளித்துள்ளது. கூட்டத்தில் 841 ஹெக்டேர் அளவுக்கொண்ட மிகவும் அதிக அடர்வனப்பகுதி சுரங்கம் பகுதிக்கு கீழ் வருகிறது என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், பிப்ரவரி 21-ம் தேதி அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே செயல்படும் நிலக்கரி சுரங்கம்.

அனுமதியை வழங்குவதற்கு முன்னதாகவே வனப்பகுதியில் இருந்து தாவரங்களை அகற்றுவது, மண்ணை அகற்றுவது பின்னர் நிலக்கரியை தோண்டி எடுப்பது போன்றவை சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணத்துவ மதிப்பீட்டுக் குழுவின் (Environment Ministry’s Expert Appraisal Committee (EAC) ) கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

பிப்ரவரி 15 நடைபெற்ற இஏசி கூட்டத்தில், நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்திற்காக கிராம சபை ஒப்புதல் மற்றும் பழங்குடியின மக்களின் நலனுக்கு பாதிப்பு ஆகிய அம்சங்கள் தொடர்பாக சத்தீஷ்கார் மாநில பழங்குடியின மக்கள் மேம்பாட்டு அமைச்சகத்திடம் அறிக்கையை கோரப்பட்டுள்ளது. வனப்பகுதியில் நிலக்கரி சுரங்கத்தால் யானைகள் வழித்தடத்திற்கு ஆபத்து தொடர்பாக அறிக்கையை அளிக்குமாறு அம்மாநில வனத்துறையிடம் கேட்கப்பட்டது. 2018 ஜூலை 24-ம் தேதி நடைபெற்ற கூட்டத்திலும் இதுதொடர்பான விளக்கம் கேட்கப்பட்டது.

ஆர்வியுஎன்எல் இந்த இரண்டு கேள்விகளுக்கு அறிக்கையை சமர்ப்பித்திருப்பதாக கூறுகிறது. ஆனால் கிராம் சபை ஒப்புதல் பெறப்பட்டதா? என்பது குறித்து எந்தஒரு விவரமும் கிடையாது. ஹஸ்டியோ அரண்ட் வனப்பகுதியில் நிலக்கரி சுரங்கங்கள் அமைப்பது தொடர்பான வழக்குகள் எதுவும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதா? என்று கூட்டத்தில் கேட்கப்பட்டுள்ளது.

இப்பகுதியில் சுரங்கம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சுதிப் ஸ்ரீவாஸ்தவா தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதுபோன்ற வனப்பகுதியில் சுரங்கம் அமைக்கும் விவகாரத்தில் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விதித்துள்ள கட்டப்பட்டை எதிர்த்து ஆர்வியுஎன்எல் நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார்.

மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் காடுகள் ஆலோசனைக் குழு, இவ்விவகாரம் தொடர்பாக இரு வழக்குகள் நிலுவையில் இருப்பதால் பார்சாவில் சுரங்கம் அமைப்பதற்கு அனுமதி வழங்குவது தொடர்பாக கூடுதல் சொலிஸ்டர் ஜெனரலிடம் கருத்தை கோரியுள்ளது ஆனால் நிலுவையில் உள்ள வழக்குகள் பார்சா சுரங்கம் விவகாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தாது என கூறியுள்ளார். இதனையடுத்து காடுகள் ஆலோசனைக் குழு அனுமதி அளிக்கும் விவகாரத்தில் முன்நோக்கி நகர்ந்துள்ளது.

பிப்ரவரி 21-ம் தேதி இஏசி கூட்டம் நடைபெற்ற போது, பார்சா சுரங்கத்திற்கு அனுமதி அளிக்கும் விவகாரம்; சுரங்கம் அமைப்பது தொடர்பாக உச்சநீதிமன்றம் மற்றும் சத்தீஷ்கார் மாநில உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குடன் தொடர்புடையது என கூறப்பட்டுள்ளது. இருப்பினும் இஏசி நிபந்தனைகளையும் விதித்துள்ளது என கூறப்படுகிறது. அதாவது சுற்றுச்சுழல் அனுமதி தொடர்பாக மூன்று வருடங்களுக்கு ஒருமுறை மூன்றாவது தரப்பு (தொழில்நுட்ப நிறுவனம் அல்லது அமைப்பு) மதிப்பீடு இருக்கும் என கூறியுள்ளது.

இவ்விவகாரத்தில் சத்தீஷ்கார் பச்சோ அந்தோலன் என்ற அமைப்பு இஏசிக்கு பிப்ரவரி 20-ம் தேதி கடிதம் ஒன்றை எழுதியுள்ளது. இத்திட்டம் தொடர்பான சட்ட மற்றும் சுற்றுசூழல் தொடர்பான பிரச்சனைகளை அதில் மையப்படுத்தியுள்ளது. சத்தீஷ்கார் சர்குஜா மாவட்டத்தில் உள்ள இரண்டு கிராமங்கள் சுரங்கம் அமைப்பது தொடர்பாக மாவட்ட கலெக்டருக்கு புகார் அளித்துள்ளன, கிராம சபை கூட்டம் நடந்தது என்பது போலியானது என்பதையும் குறிப்பிட்டுள்ளது.

ஏற்கனவே ஹஸ்டியோ அரண்ட் வனப்பகுதியில் இயங்கும் பார்சா ஈஸ்ட் & கேடா பாசோவ் நிலக்கரி சுரங்கத்திற்கு அடர்வனப்பகுதியில் அனுமதி கிடையாது என்ற சத்தீஷ்கார் அரசின் நிபந்தனை விதித்துள்ளது என சமூக ஆர்வலர்கள் மற்றும் சட்ட நிபுணர்கள் குறிப்பிடுகிறார்கள். இருப்பினும் இப்போது அடர்வனப்பகுதியில் சுரங்கம் அமைக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் உள்ள கொள்கை ஆராய்ச்சி மையத்தின் சட்ட ஆய்வாளர் காஞ்சி கோலி பேசுகையில், “சட்ட சிக்கல்கள் மற்றும் செயல்முறை குறைபாடுகள் தவிர்த்து, பார்சாவில் நிலக்கரி சுரங்கம் அமைக்க ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது முன்னெச்சரிக்கை கொள்கைக்கு முற்றிலும் எதிரானது. மத்திய இந்தியாவின் கடைசி மீதமுள்ள வனப்பகுதிகளில் ஒரு பகுதியை சுரங்கம் தொடங்கதல் வன உரிமைகளை மீறுதல் மற்றும் மனித வனவிலங்கு மோதலை அதிகரிக்கும் செயலாகும் என் கிறார்,” என கூறியுள்ளார்.

இப்போது நிலக்கரி சுரங்கம் அமைக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது வன பாதுகாப்புக்கு தீங்கு விளைவிப்பதாகும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் அஞ்சுகின்றனர்.

“பார்சா சுரங்கத்திற்கு வழங்கப்பட்ட சுற்றுச்சூழல் அனுமதி சட்டவிரோதமானது, காடுகள் ஆலோசனைக் குழு ஏற்கனவே ஹஸ்டியோ அரண்ட் வனப்பகுதியில் சுரங்கம் அமைக்க அனுமதி கிடையாது என கூறியுள்ளது. 2014-ம் ஆண்டு இந்திய வன சர்வே குழு அறிக்கையில், ஹஸ்டியோ அரண்ட் வனப்பகுதி சுரங்கம் அமைக்க தடைசெய்யப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்று பரிந்துரை செய்யப்பட்டுள்ளது,” என்று வழக்கறிஞர் ஸ்ரீவாஸ்தவா கூறியுள்ளார். ஏற்கனவே இப்பகுதியில் நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவ்விவகாரத்தில் அனைத்து விதிகளும் மீறப்பட்டு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

யானைகள் வழித்தடம்…

ஆர்வியுஎன்எல் இயக்குநர் எஸ்.எஸ். மீனா பேசுகையில், “வனத்துறையின் கடைசிகட்ட அனுமதியை தவிர்த்து நாங்கள் அனைத்து விதமான ஒப்புதலையும் பெற்றுவிட்டோம். கடைசிகட்ட அனுமதி எந்நேரத்திலும் கிடைக்கலாம். உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குக்கும் இதற்கும் தொடர்பு எதுவும் கிடையாது,” எனக் கூறியுள்ளார். நாங்கள் சுற்றுசூழல் மற்றும் சமூக பொறுப்பை கொண்ட பெரிய நிறுவனம் ஆகும் என அதானி குழுமம் தெரிவித்துள்ளது.

வனவிலங்குகள்

ஹஸ்டியோ அரண்ட் காடுகளின் தெற்குப் பகுதியில் பல்வேறு வகையான உயிரினங்கள் வாழ்வதாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. 51 வகையான மூலிகைத் தாவரங்கள் உள்ளது. இப்பகுதியில் மேலும் நிலக்கரி சுரங்கம் ஹஸ்டியோ எனும் ஆற்றையும் அழிக்கவல்லது. ஏற்கனவே காட்டிற்குள் 75 கிலோமீட்டருக்கு ரெயில்பாதை அமைக்கப்பட்டுள்ளது. நிலக்கரி சுரங்கங்களிலிருந்து நிலக்கரி வெளியே எடுத்து செல்ல இதனைப் பயன்படுத்துகின்றனர். இந்த ரெயில்பாதையும் காட்டின் சூழலை அழிக்கிறது. சுற்றுச்சூழலைப் பாதிக்கும் திட்டம் வரும்போது சட்டத்தேவைகளைப் பூர்த்தி செய்யாமல் எளிதாக உள்நுழையும் தன்மை இந்தியா முழுவதுமே இருக்கிறது. ஏற்கனவே இப்பகுதியில் அமைந்த நிலக்கரி சுரங்கங்கள் காரணமாக மக்கள் குடிநீர் இன்றி தவித்து வருகிறார்கள். இப்போது அனுமதி வழங்கப்பட்டு உள்ளது நிலையை மோசமாக்கும் என்றே பார்க்கப்படுகிறது. வனவிலங்குகளுக்கு பெரும் அழிவை நேரிடச்செய்யும்.