பிரதமர் மோடியின் செயல்பாடு குறித்து தமிழக மக்கள் சொல்வது என்ன? கருத்துக்கணிப்பு தகவல்

Read Time:5 Minute, 20 Second

பிரதமர் மோடியின் செயல்பாட்டில் நாட்டிலேயே மிகக் குறைந்த அளவாக தமிழக மக்கள்தான் திருப்தியும், மகிழ்ச்சியும் தெரிவித்துள்ளார்கள் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.

பிரதமர் மோடியின் செயல்பாடு மற்றும் நிர்வாகம் குறித்து ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனம் மற்றும் சிவோட்டர் இணைந்து இந்தியா முழுவதும் கருத்துக்கணிப்பை நடத்தியுள்ளது. ஒவ்வொரு மாநில வாக்காளர்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியது. சிவோட்டர்ஸ், ஐஏஎன்எஸ் ஏற்கெனவே நடத்திய இரு கருத்துக் கணிப்புகளில் நாட்டிலேயே மிகப் புகழ்பெற்ற தலைவராக மோடி என்று முடிவுகள் வெளியானது. இதற்கு அடுத்தப்படியாக ராகுல் காந்தி, மம்தா பானர்ஜி உள்ளனர் என தெரியவந்தது.

17-க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பிரதமர் மோடியின் செயல்பாடு, நிர்வாகம் திருப்தியும், மகிழ்சியும் அளிப்பதாக 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வாக்காளர்கள் தெரிவித்துள்ளனர். பிஜு ஜனதா தளம் ஆளும் ஒடிசா, திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி செய்யும் மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களிலும் 45 சதவிதத்திற்கும் அதிகமாக வாக்காளர்கள் மோடியின் செயல்பாடு, நிர்வாகம் திருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த வாக்காளர்களில் 74 சதவீதம் பேர் பிரதமர் மோடியின் செயல்பாடு திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளார்கள். அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் வாக்காளர்கள் 66.3 சதவீதம் பேரும், கோவாவில் உள்ள வாக்காளர்கள் 66.3 சதவீதம் பேர் மோடியின் செயல்பாடு திருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்கள். பா.ஜனதா ஆட்சி செய்யும் அரியானாவில் உள்ள வாக்காளர்கள் மோடியின் செயல்பாடு திருப்தி அளிப்பதாகவும், மகிழ்ச்சி அளிப்பதாகவும் 65.9 சதவீதம் பேர் தெரிவித்துள்ளார்கள்.

மோடியின் செயல்பாட்டில் 50 சதவீதத்துக்கும் குறைவாக திருப்தியும், மனநிறைவாக அளிப்பதாக 13 மாநிலங்களை சேர்ந்த வாக்காளர்கள் தெரிவித்துள்ளார்கள். பா.ஜனதா சிவசேனா கூட்டணி ஆட்சி செய்யும் மராட்டியத்தில் 47.9 சதவீதம் பேரும், அசாமில் 47 சதவீதம் வாக்காளர்களும், உத்தரப்பிரதேசத்தில் 43.9 சதவீதம் வாக்காளர்களும் மோடியின் செயல்பாடு திருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்கள். இந்த 3 மாநிலங்களுமே பாஜக ஆளும் மாநிலங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி ஆளும் மேற்கு வங்கத்தில் பிரதமர் மோடியின் செயல்பாடு நிர்வாகத்தில் 43.2 சதவீதம் பேரும், ஜம்மு காஷ்மீரில் 39.6 சதவீதம் பேரும் திருப்தி அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர்.

கருத்துக்கணிப்பு முடிவு.

காங்கிரஸ் கட்சி ஆளும் பஞ்சாப் மாநில வாக்காளர்களில் 12 சதவீதம் பேரும், ஆந்திராவில் 23.6 சதவீதம் பேரும் பிரதமர் மோடியின் செயல்பாடு சிறப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்கள். நாட்டிலேயே மிக குறைவாக தமிழகம், கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களை சேர்ந்த மக்கள்தான் இருப்பதிலேயே மிகக்குறைவாக பிரதமர் மோடியின் செயல்பாடு திருப்தி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

இதில் கேரள மாநில வாக்காளர்களில் 7.7 சதவீதம் பேரும், புதுச்சேரியில் 10.7 சதவீதம் வாக்காளர்களும் மோடியின் செயல்பாடு மகிழ்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளனர். நாட்டிலேயே மிகக்குறைவாக தமிழக வாக்காளர்களில் 2.2 சதவீதம் பேர்தான் தான் பிரதமர் மோடியின் செயல்பாடு மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர். வர்தா புயல், கஜாபுயல், மக்களுக்கு விரோதமான மத்திய அரசின் திட்டங்கள், நீட் தேர்வு போன்ற பல்வேறு சம்பவங்களில் மத்தியில் ஆளும் பா.ஜனதா மீது தமிழக மக்கள் மத்தியில் கடும் அதிருப்தி இருந்து வந்தது. அதனால்தான் பிரதமர் மோடிக்கு வரும் போதெல்லாம் தமிழகத்தில் அரசியல் கட்சிகள் எதிர்ப்பு தெரிவிக்கின்றன, டுவிட்டரிலும் கோபேக்மோடி டிரெண்டாகி வருகிறது. அந்த நிலை கருத்துக்கணிப்பிலும் எதிரொலித்துள்ளது.