அமேதியை தக்கவைத்துக் கொள்வது ராகுல் காந்திக்கு முக்கியம் ஏன்?

Read Time:3 Minute, 28 Second

உத்தரப்பிரதேசத்தில் உள்ள அமேதி நாடாளுமன்றத் தொகுதி மிகவும் கவனத்தை ஈர்த்துள்ளது. இங்கு காங்கிரஸ் சார்பில் ராகுல் காந்தியே மீண்டும் களமிறங்குகிறார். பா.ஜனதா சார்பில் மீண்டும் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி களமிறங்குகிறார். 2014 தேர்தலில் மோடி அலைக்கு மத்தியில் தேர்தல் நடைபெற்றது. அப்போது ராகுல் காந்தி தேர்தலில் 1.07 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்றார். 2009 தேர்தலில் ராகுல் காந்தியின் வெற்றி வாக்கு வித்தியாசம் 3.70 லட்சமாக இருந்தது. 2014-ல் அது குறைந்துள்ளது.

2017-ம் ஆண்டு உ.பி. நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பா.ஜனதா தன்னுடைய அதித பலத்தை காட்டியது. அமேதியையும் ஆட்டிவைத்தது. அமேதி தொகுதியின் எம்.எல்.ஏ. பா.ஜனதாவை சேர்ந்த கரிமா சிங் ஆவார். அமேதியை மேம்படுத்த கொண்டுவந்த திட்டங்களை மத்திய அரசு செய்யவில்லை என்று பா.ஜனதா குற்றம் சாட்டுகிறது. காந்தியின் குடும்பம் எம்.பி.யாக தொடர்ந்து இருந்தாலும் காங்கிரஸால் வளர்ச்சி திட்டம் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை என பா.ஜனதா பிரசாரம் செய்கிறது. இப்படியொரு சூழ்நிலையில்தான் தேர்தல் நடக்கிறது.

அமேதியில் போட்டியில்லை என்று சமாஜ்வாடி-பகுஜன் சமாஜ் கூட்டணி அறிவித்தாலும் கடுமையான போட்டியிருக்கும் என பார்க்கப்படுகிறது. இதற்கிடையே பிரியங்காவின் வருகையும் ராகுல் காந்தியின் வெற்றியை பாதுகாக்கும் அம்சமாகவே இருக்கும். 2004-ம் ஆண்டிலிருந்து ராகுல் காந்தி எம்.பி.யாக இருக்கும் அமேதி தொகுதி, ராகுல் காந்தி, சோனியா காந்தி, சஞ்சய் காந்தி போட்டியிட்டு வெற்றிப்பெற்ற தொகுதியாகும். காங்கிரஸின் கட்டமைப்பு கொண்ட பகுதியாகும். இங்குதான் 2017 தேர்தலில் பா.ஜனதா வெற்றியை பறித்து பலம்காட்டியுள்ளது.

16 கோடிக்கும் அதிகமான மக்கள் தொகையை கொண்ட உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள 80 தொகுதிகள் மத்தியில் ஆட்சியமைக்கும் கட்சியை நிர்ணயம் செய்வதில் முக்கியத்துவம் பெறுகிறது. இங்கு காங்கிரஸின் செல்வாக்கை உயர்த்த வேண்டும் என்பதும் முக்கியமாகும். கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிடலாம் என கூறப்படுகிறது. ஆனால் அவருடைய தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. எத்தகைய போட்டியிருந்தாலும் அமேதியை தக்கவைப்பது ராகுலுக்கு முக்கியமானது. மறுபுறம், கேரளாவில் ராகுல் காந்தி போட்டியிட்டால் பா.ஜனதா கால்பதிக்க முடியாத தென்னக்கத்தில் காங்கிரஸை வலுப்படுத்த உதவும் என மாநில காங்கிரஸ் நினைக்கிறது.