மத்தியில் ஆட்சியமைக்க பா.ஜனதாவிற்கு பெரும்பான்மை கிடைக்காது…

Read Time:3 Minute, 26 Second

மத்தியில் ஆட்சியமைக்க காங்கிரசுக்கோ, பா.ஜனதாவிற்கோ பெரும்பான்மை கிடைக்காது என நவீன் பட்நாயக் கூறியுள்ளார்.

கிழக்கு கடற்கரை மாநிலமான ஒடிசாவில் பிஜு ஜனதா தளம் 2000-ம் ஆண்டு ஆட்சிக்கு வந்தது. நவீன் பாட்நாயக் தலைமையில் ஆட்சி தொடங்கியது. இப்போது வரையில் அங்கு பிஜு ஜனதா தளம்தான் ஆட்சி செய்கிறது. மாநிலத்தில் நாடாளுமன்றத் தேர்தலுடன், சட்டசபைத் தேர்தலும் நடைபெறுவது வழக்கமாகும். 2014–ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் வீசிய மோடி அலையையும் பிஜு ஜனதா தளம் வீழ்த்தியது.

பிஜு ஜனதா தளம் கட்சி மொத்தம் உள்ள 21 தொகுதிகளில் 20 தொகுதிகளை கைப்பற்றியது. சட்டசபையில் 147 தொகுதிகளில் 117 தொகுதிகளை கைப்பற்றியது. பா.ஜனதா ஒரு தொகுதியில் வெற்றியை தனதாக்கியது. மாநிலத்தில் பா.ஜனதாவின் வளர்ச்சி கணிசமாக உயர்ந்து உள்ளது. காங்கிரஸ் மண்ணை கவ்வியது. மாநிலத்தில் வளர்ச்சியென்ற கோஷத்தை முன்வைத்து பா.ஜனதா பிரசாரம் செய்கிறது. பா.ஜனதா முன்பு காட்டிய வேகம் தேர்தலையொட்டி அங்கு சற்று அமைதியாக நகர்கிறது.

பா.ஜனதாவிற்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத பட்சத்தில் பிஜு ஜனதா தளம் ஆதரவு முக்கியமானது என பார்க்கிறது. மாநிலத்தில் இம்முறையும் பிஜு ஜனதா தளமே வெற்றிப்பெறும் என கருத்துக்கணிப்புகள் வெளியாகியுள்ளது. மாநிலத்தில் பெண்களுக்கு வேட்பாளர் ஒதுக்கீட்டிலும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. 33 சதவிதம் என்பதை பிஜு ஜனதா தளம் நிரூபித்துள்ளது.

தேர்தல் பிரசாரத்தில் நவீன் பட்நாயக் பேசுகையில், நாடாளுமன்றத் தேர்தலில் எந்தஒரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது. ஒடிசாவில் உள்ள 21 நாடாளுமன்ற தொகுதிகளிலும் பிஜூ ஜனதா தளம் நிச்சயம் வெற்றி பெற்று, மத்தியில் யார் ஆட்சி அமைப்பது என்பதை தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் என்றார். ஒடிசாவுக்கு சிறப்பு அந்தஸ்து தருவதாக வாக்குறுதி அளித்த பா.ஜனதா, அதிகாரத்துக்கு வந்ததும் அதை புறக்கணித்து விட்டதாக நவீன் பட்நாயக் குற்றம் சாட்டினார்.

ஒடிசா மாநிலத்தில் ரெயில்வே துறையின் மூலம் மத்திய அரசு ரூ. 20 ஆயிரம் கோடி வரையில் லாபம் அடைகிறது. ஆனால் மாநிலத்தில் ரெயில்வே கட்டமைப்பை முன்னெடுப்பது கிடையாது. ஒடிசாவில் நிலக்கரி சுரங்கம் மூலமாக மத்திய அரசு ஆயிரம் கோடிகளில் வருவாய் பெறுகிறது. ஆனால் மாநிலத்திற்கு கிடைப்பது புகையும், சுகாதாரமின்மையும்தான். ஒடிசாவிற்கு கிடைக்க வேண்டிய சிறப்பு அந்தஸ்தை பெறுவோம். மாநிலத்திற்கு நலத்திட்டங்களை பிஜு ஜனதா தளம் தொடர்ந்து செய்யும் என கூறியுள்ளார்.