அரசியலில் அடைய விரும்பும் இலக்கு என்ன? மனம் திறந்தார் தமிழிசை சவுந்தர்ராஜன்

Read Time:5 Minute, 5 Second

அரசியலில் என்னுடைய குடும்பம் கொண்டுள்ள தூய்மையை கடைப்பிடிப்பேன் என தமிழிசை சவுந்தர்ராஜன் கூறியுள்ளார்.

பா.ஜனதாவின் வேட்பாளராக தூத்துக்குடியில் களமிறங்கியுள்ள அக்கட்சியின் தலைவர் தமிழிசை சவுந்தர்ராஜன் தன்னுடைய அரசியல், குடும்ப வாழ்க்கை தொடர்பாக புதிய தலைமுறைக்கு பேட்டியளித்து பேசியுள்ளார். பேட்டியில் பா.ஜனதாவில் சேர்ந்ததால் அப்பா என்னிடம் பேசவே இல்லை, வலிமையான பெண்ணாக இருந்தாலும் அது என்னை மிகவும் கவலைக்குள் ஆழ்த்தியது என குறிப்பிட்டுள்ளார்.

காங்கிரஸ் பாரம்பரியம் நிறைந்த குடும்பத்தில் இருந்து பா.ஜனதாவில் சேர்ந்ததால் நேரிட்ட விளைவுகள், சாதிக்க வேண்டியவை குறித்தான கேள்விக்கு பதில் அளித்துள்ளார்.

“எனக்கு அரசியலில் சேர வேண்டும் என்ற விருப்பம் சிறு வயதில் இருந்தே இருந்தது. எனக்கு அப்பாதான் அப்போது எல்லாமே… அப்பா தேசியமும், தெய்வீகமும் இரு கண்கள் என எனக்கு பாடம் சொல்லிக்கொடுத்தார். காரில் செல்லும் போது ராமாயணம், மகாபாரதம் தொடர்பாக எடுத்துரைப்பார். அவருடைய அரசியல் செயல்பாடுகள் அனைத்திலும் என்னுடைய பங்கு இருக்கும். அவருக்கான தேவையான புத்தகங்களை எடுத்துக் கொடுப்பது, அவருடைய பாதயாத்திரை முதலான விஷயங்களில் கலந்துக்கொள்வது என அனைத்தும் செய்தவள்.

அறிக்கையை நான் எழுதி கொடுப்பேன். என்னை இசையென்றுதான் அழைப்பார். அப்பா 1996-ல் மது ஒழிப்பு பிரசாரம் செய்த போது சிறைக்கு சென்ற போது அங்கு சென்று பார்த்தேன். அப்போது என்னை அரசியலுக்கு கொண்டுவர கோரிய மற்றொரு தலைவரிடம் கோபம் கொண்டார். என்னுடைய வாரிசை நான் இருக்கும் வரையில் அரசியலுக்கு கொண்டுவர மாட்டேன். அது வாரிசு அரசியலாகும் என்றார். அப்பாவின் அரசியல் நிகழ்வுகளில் எப்போதும் கூடவே இருப்பேன். எனக்கும் அப்பாவுக்கும் அப்படியொரு நெருக்கமும் பிணைப்பும் அரசியலில் இருந்தது.

அரசியலுக்கு வர வேண்டும் என விரும்பிய போது திராவிடக் கட்சிகளில் சேர விருப்பம் கிடையாது. வாஜ்பாயின் பேச்சு, வளர்ச்சிக்கான நடவடிக்கை என்னை பா.ஜனதாவில் இணைய செய்தது. என்னுடைய வீட்டில் என்ன நடக்கும் என்று என்னுடைய கணவர் பதட்டமாகிப் போனார். என்னுடைய கணவர் தகவல் தெரிவித்ததும் அப்பா மிகவும் அப்செட்டாகிவிட்டார். அதன்பின்னர் பலமாதங்கள் என்னிடம் பேசியது கிடையாது. அது இன்னும் மாறாத வடுவாக, வலியாகவே இருக்கிறது.

நான் பா.ஜனதா தலைவரானதும் கோவிலுக்கு சென்று எனக்காக வேண்டிக்கொண்டு பிரசாதத்தை வீட்டில் வந்து கொடுத்துவிட்டு சென்றார். என்னுடைய அப்பா மிகவும் ஒழுக்கமானவர். நேர்மையானவர். யாருடைய காசுக்கும், பதவிக்கும் ஆசைப்பட்டதே கிடையாது. ஆனால், அவருக்கான அங்கீகாரமோ, பெருமையோ கிடைக்கவில்லை. அவரின் பெயரை காப்பாற்றும் விதமாக, ‘குமரி அனந்தன் பொண்ணு’ன்னு பேர் எடுக்க வேண்டும். அப்பாவுக்குப் பெருமை சேர்க்க வேண்டும். இதுதான் என் ஆசையாகும். அப்பாவால் அடைய முடியாத உயரத்தை அடைய எனக்கு சக்தியை கொடுக்க வேண்டும்.

என்னுடைய அப்பா எப்படி அரசியலில் தூய்மையாக இருந்தாரோ, அப்படியிருக்க வேண்டும். விமர்சனம் எப்படி வேண்டும் என்றாலும் இருக்கலாம், நான் கூட விளையாட்டுக்கு சொல்லும் போது, சுருட்ட தலையை பார்த்து கிண்டல் செய்யும் போது நான் யாருடைய பணத்தையும் சுருட்டவில்லை என்று கூறுவேன். என்னுடைய அப்பாவின் அரசியல் தூய்மை எப்போதும் அப்படியே இருக்கும். இன்னாருடைய பொண்ணு, வம்சம், குடும்பம் என்றால் தூய்மையான அரசியல்வாதிகள் என்ற பெயரை எப்போதும் காப்பாற்றுவேன் என்பதை சொல்ல விரும்புகிறேன். அரசியலில் அடைய வேண்டிய இலக்கு, முதலில் அமைச்சர், பின்னர் முதல்-அமைச்சர் (சிரிப்புடன்) என்று கூறியுள்ளார்.