மோடிக்கும், ஜெட்லிக்கும் ஒன்றுமே தெரியாது… சுப்பிரமணியன் சாமி தடாலடி

Read Time:3 Minute, 29 Second

மோடிக்கும், ஜெட்லிக்கும் பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது என சுப்பிரமணியன் சாமி கூறியுள்ளார்.

பா.ஜனதா மூத்த தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணிய சாமி மத்திய நிதி மந்திரியாக இருக்கும் அருண் ஜெட்லியை பல்வேறு விவகாரங்களில் விமர்சனம் செய்து வருகிறார். சுப்பிரமணிய சாமியின் கருத்துக்களை பா.ஜனதா மேலிடம் ஒரு பொருட்டாக எடுப்பது கிடையாது. 2019 நாடாளுமன்றத் தேர்தலுக்கு பா.ஜனதா தீவிர வியூகங்களுடன் களமிறங்கும் நிலையில் சுப்பிரமணியன் சாமி சர்ச்சைக்குரிய கருத்து ஒன்றை தெரிவித்துள்ளார்.

கொல்கத்தாவில் நிகழ்ச்சியொன்றில் பேசுகையில், நாட்டின் பொருளாதாரம் மற்றும் உள்நாட்டு உற்பத்தி குறித்து விளக்கிய அவர், பிரதமர் மோடி மற்றும் நிதி அமைச்சர் அருண் ஜெட்லிக்கும் பொருளாதாரம் என்றால் என்னவென்றே தெரியாது என குறிப்பிட்டார்.

பிரதமர் மோடியும், ஜெட்லியும் இந்தியா உலகப் பொருளாதாரத்தில் 6-வது இடத்தில் இருக்கிறது என்று தொடர்ந்து கூறி வருகிறார்கள். இதில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த3-வது இடத்தில இந்தியா இருக்கிறது என்ற உண்மை அவர்களுக்கு தெரியுமா? உலக அளவில் மக்களின் வாங்கும் திறனை அடிப்படையாக கொண்டுதான் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைக் கணக்கிட வேண்டும். இதுதான் அறிவியல் ரீதியாக, பொருளாதார ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாகும். அப்படிபார்த்தால் அமெரிக்கா முதலிடத்திலும், சீனா இரண்டாவது இடத்திலும், இந்தியா 3-வது இடத்திலும் இருக்கிறது.

ஆனால் இந்தியா 6-வது இடத்தில் இருக்கிறது என்று பிரதமர் மோடி சொல்லுவது ஏன்? என எனக்கு தெரியவில்லை. ஆனால் அவருக்கும் பொருளாதாரம் தெரியாது. நிதியமைச்சருக்கும் பொருளாதாரம் தெரியாது. அந்நிய செலாவணி அடிப்படையில்தான் இந்தியா 6-வது இடத்தில் இருக்கிறது. அதைவைத்து நாட்டின் வளர்ச்சியை கணக்கிடக்கூடாது.

செலாவணி மதிப்பில் ஏற்றம் இறக்கம் இருப்பது இயல்பானது என்று விளக்கமாகக் கூறி மோடிக்கு கடிதம் எழுதினேன். மோடி சொல்வதுபோல் செலாவணி மதிப்பில் கணக்கிட்டால்கூட இந்தியா 6-வது இடத்தில் இருக்காது, 7-வது இடத்தில்தான் இருக்கிறது. ஒருநாட்டின் பொருளாதார வளர்ச்சியின் அளவை கணக்கிட சரியான வழி என்பது மக்களின் வாங்கும் சக்தியை வைத்து கணக்கிடுவதுதான். அந்த வகையில், அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்த இடத்தில் உலக அளவில் இந்தியா இருக்கிறது.

காலனி ஆதிக்கத்துக்குப் பின் செழிப்பான நாடுகளில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இருக்கிறது” என்று பேசியுள்ளார் சுப்பிரமணியன் சாமி.