புல்வாமா தாக்குதலில் பயங்கரவாதிகள் பயன்படுத்தியது அமெரிக்க ‘விர்ச்சுவல் சிம்’

Read Time:4 Minute, 4 Second

புல்வாமா தாக்குதலில் தகவல் பறிமாற்றத்திற்கு பயங்கரவாதிகள் பயன்படுத்தியது அமெரிக்க நிறுவனம் வழங்கிய விர்ச்சுவல் சிம் என தெரியவந்துள்ளது.

காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி துணை ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் மீது, வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட காரை மோதி தற்கொலைப்படை பயங்கரவாதி நடத்திய தாக்குதலில் 40 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். இச்சம்பவம் தொடர்பாக தேசியப் புலானாய்வு பிரிவு போலீஸ் விசாரணையை மேற்கொண்டு வருகிறது. விசாரணையில் முக்கிய தகவல்கள் சிக்கியது. இதற்கிடையே தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட பயங்கரவாதிகள் காஷ்மீரில் வேட்டையாடப்பட்டனர்.

இப்போது பயங்கரவாதிகளின் தகவல் மாற்றம் தொடர்பாக தேசிய புலானாய்வு பிரிவு தீவிரமாக விசாரணையை மேற்கொள்கிறது. இந்திய உளவுப்பிரிவு இடைமறிக்க முடியாத வகையில் உரையாடல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாகிஸ்தானில் இருக்கும் பயங்கரவாத கமாண்டர்கள் மற்றும் காஷ்மீரில் செயல்படும் பயங்கரவாதிகள் இடையிலான உரையாடலை இந்திய உளவுப்பிரிவு கைப்பற்ற முடியாத வகையில் ஜெய்ஷ் பயங்கரவாதிகள் விர்ச்சுவல் சிம் எனப்படும் மெய்நிகர் அடிப்படையிலான சிம் என்ற புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

எல்லை தாண்டி வந்து பயங்கரவாதத்தில் ஈடுபடும் பயங்கரவாதிகள் இவ்வகை சிம் கார்டுகளை பயன்படுத்துவது வழக்கமாகி வருகிறது. இப்போது புல்வாமா தாக்குதலில் பயங்கரவாதிகள் பயன்படுத்தியது இவ்வகை சிம் கார்டுகளைதான். இதுதொடர்பாக காஷ்மீர் மாநில மூத்த போலீஸ் அதிகாரி கூறுகையில், “விர்ச்சுவல் சிம் கார்டுகளைப் பயன்படுத்தி, ஜெய்ஷ் பயங்கரவாதிகள் தொடர்பில் இருந்துள்ளனர். இந்தத் தாக்குதலின் மூளையாக செயல்பட்ட முடாசிர்கான், டிரால் பகுதியில் நடந்த சண்டையில் பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்டான்.

விர்ச்சுவல் சிம் கார்டுகள் மூலம் கம்ப்யூட்டர் வழியாக தொலைபேசி நம்பர் உருவாக்கப்படும். ஸ்மார்ட்போனில் செயலியை டவுன்லோடு செய்வதன் மூலம் அந்த செல்போன் எண்ணைப் பயன்படுத்தலாம். இந்த செயலிக்கு சிம் கார்டு தேவைப்படாது இதுபோன்ற சேவையை அமெரிக்க நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. இந்த எண்ணுக்கு முன்பாக சேர்க்கப்படும் இணைப்பு எண் (+1) அமெரிக்காவை அடிப்படையாகக் கொண்டதாகும். இதனால் தாக்குதலின்போது பயன்படுத்தப்பட்ட விர்ச்சுவல் சிம் தொடர்பான விவரங்களைப் பெற அமெரிக்காவின் உதவியை நாடியுள்ளோம்.

விர்ச்சுவல் சிம் உடன் இணைக்கப்பட்டிருந்த தொலைபேசி எண்கள், அதன் பயன்பாட்டை தொடங்கியவர்கள், அதன் இணைய இணைப்பு முகவரி (ஐ.பி.) உள்ளிட்ட தகவல்களை அமெரிக்காவிடம் கேட்டுள்ளோம்.” என குறிப்பிட்டுள்ளார். மும்பை தாக்குதலின் போது இதுபோன்ற சிம்தான் பயன்படுத்தப்பட்டது. அமெரிக்காவில் இருந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை சேர்ந்த ஜாவத் இக்பால் வாங்கியது, இதற்கு நிதி வெஸ்ட்ரன் யூனியன் நிதி பறிமாற்றம் மூலம் செய்யப்பட்டு இருந்தது தெரியவந்தது.