தமிழகத்தில் மற்றொரு பசுமை வழிச்சாலை… அழிக்கப்படும் புலிக்குன்றம் வனப்பகுதி…!

Read Time:8 Minute, 23 Second

சென்னை – சேலம் இடையிலான பசுமை வழிச்சாலைக்கு நிலங்களை கையகப்படுத்த எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்ற போராட்டம் காரணமாக திட்டம் கிடப்பில் கிடக்கிறது. வாழ்வாதாரம் இழந்து, சொந்த ஊரிலே நாங்கள் அகதிகளாக வேண்டுமா? என்ற விவசாயிகளின் ஓலம் என்றும் மறவாது. இத்திட்டத்திற்கான விடையென்ன வென்று தெரியாத நிலையில் மற்றொரு திட்டம் பசுமை வழிச்சாலையென்று ஆந்திராவிலிருந்து தமிழகம் நோக்கி வருகிறது.

ஆந்திர மாநிலம் (82 கி.மீட்டர்) சித்தூரிலிருந்து தமிழகத்தின் (44 கி.மீட்டர்) திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தச்சூர் வரை 126 கி.மீட்டர் தூரத்திற்கு ரூ.3,197 கோடி மதிப்பில் ஆறு வழிச்சாலை அமைக்க திட்டமிட்டுள்ளது. சித்தூரில் தொடங்கும் சாலை பொன்னேரி வழியாக தச்சூரில் ஏற்கனவே சென்னை சுற்றுவட்டச் சாலை அமைக்க திட்டமிடப்பட்டுள்ள இடத்தில் இணைகிறது. இத்திடத்திற்கு தமிழகத்தில் 889 ஏக்கர் நிலம் திருவள்ளூர் மாவட்டத்தில் கையகப்படுத்தப்பட உள்ளது.

எண்ணூர் காமராஜர் துறைமுகம் மற்றும் காட்டுப்பள்ளி துறைமுகத்திற்கு சரக்கு வாகனங்கள் விரைந்து செல்வதற்கு ஏதுவாக இந்த சாலை அமைக்கப்படுகிறது. சென்னை மற்றும் பெங்களூர் விரைவு வழித்தடத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட உள்ளது. பொன்னேரி ஸ்மார்ட் சிட்டி மற்றும் மகேந்திரா வேல்சிட்டியை இந்த சாலை இணைக்கும். பொருளாதார மண்டலத்தை மேம்படுத்தும் (பாரத்மாலா திட்டம்) நோக்கத்திற்காகவே இந்த சாலை அமைக்கப்படுகிறது. இந்த 6 வழிச்சாலை அமைவதன் மூலம் சென்னை மாநகரத்திற்குள் வரும் வாகனங்களின் எண்ணிக்கை குறைய வாய்ப்பு உள்ளது.

காற்று மாசு குறையும் என தேசிய நெடுஞ்சாலை ஆணையகம் (என்எச்ஏஐ) தெரிவிக்கிறது. வழக்கம்போல இந்த பசுமைச்சாலையும் பசுமையை அழிக்கும் வகையில்தான் இருக்கிறது. வனங்கள், வன விலங்குகள், இயற்கை வளங்களை, விவசாய நிலங்களை, நீராதாரங்களை அழிக்கும் வகையில்தான் இருக்கிறது.

நிலம் அளவிடும் பணிகள் தொடக்கம்

இத்திட்டம் ஏற்கனவே பரிந்துரைக்கப்பட்டதுதான் என்றால் இப்போது நிலம் அளவிடும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. அதிகாரிகள் விளைநிலங்களில் மஞ்சள் நிற பெயிண்ட் அடிக்கப்பட்ட கற்கள் நடப்பட்டதை பார்த்து மிகவும் அதிர்ச்சியடைந்துள்ளனர். அவர்களுக்கு நோட்டீஸ் எதுவும் வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கிறார்கள்.

கிராம சபையின் மூலம் எதிர்ப்பு தெரிவித்து மக்கள் ஆட்சியரை அணுகிய பின்னரும் காவல்துறை பாதுகாப்புடன் இப்பணி நடக்கிறது. இதனால் வேதனையில் உறைந்த விவசாயிகள் போராட்டங்களை மேற்கொண்டனர். கருத்துக்கேட்பு கூட்டங்களையும் புறக்கணிக்கப்படுகிறது. அதிகாரிகள் கற்களை நடும் பணியை தொடர்ந்து செய்கிறார்கள் என குற்றம் சாட்டப்படுகிறது.

64 சதவிதம் விவசாய நிலம்

திருவள்ளூர் மாவட்டத்தில் கையகப்படுத்தப்படும் 889 ஏக்கர் நிலத்தில் 64 சதவீதம் விவசாய நிலமாகும். இது மூன்று போகமும் விளையக்கூடியது. நெற்பயிர்கள் நடப்படும் நிலத்தில் அளவை கற்களை பார்க்கும் விவசாயிகள் என்ன நடக்கும் என்ற வேதனையில் சிக்கியுள்ளனர். விவசாயி ஒருவர் பேசுகையில், “ஆறு வழிச்சாலை என்ற பெயரில் நிலங்களை கையகப்படுத்தி, சொந்த ஊரிலேயே எங்களை அகதிகளாக ஆக்காதீர்கள். அதை விட, இந்த மண்ணிலேயே குழி தோண்டி புதைத்து விடுங்கள்.

விவசாய நிலத்தை நாங்கள் வழங்கிவிட்டு, மண் சோறையா சாப்பிட முடியும். எங்களது எதிர்ப்பையும் மீறி விவசாய நிலங்களை கையகப்படுத்தினால் தற்கொலை செய்துகொள்ள கூட தயாராக உள்ளோம்’’ என கதறினர். நெல் உற்பத்தி பெரிதும் பாதிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனப்பகுதியும், நீர்நிலைகளும்

இத்திட்டம் தொடர்பாக என்எச்ஏஐ மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு வழங்கிய பரிந்துரையில், 137 கிராமங்கள் வழியாக செல்லும் சாலை பொன்னைய், நாகாரி, அரானை ஆகிய ஆறுகளையும், சிறு கால்வாய்களையும் கடந்து செல்கிறது. 27 குளங்கள், தடுப்பணைகள் சாலையை கட்டமைக்கும் பகுதிக்குள் வருகிறது. இதில் சில நீர்நிலைகள் நேரடியாகவே பாதிப்புக்கு உள்ளாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் புலிக்குன்றம் காப்புக் காட்டின் 86 ஏக்கர் நிலம் இதற்காக அழிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது. காடுகளை அழிப்பதால் அங்கு வாழும் உயிரினங்கள் மடியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. வனப்பகுதிகளில் கரடி, மான், நரி, காட்டுப்பன்றி போன்ற விலங்குகளும், பறவை இனங்களும் உள்ளன. இந்த உயிரினங்கள் பெருமளவு அழியும் நிலை ஏற்பட்டுள்ளது. இயற்கையின் சூழியல் போக்கையே அவ்விடத்தில் மாற்றும். சாலைக்காக ஏற்கனவே உள்ள சாலைகளின் ஓரங்களில் உள்ள 25,200 மரங்கள் வெட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2018 ஆகஸ்டில் பெரிய நீர்நிலைகள், வனங்கள் இடையே செல்லும் சாலையினால் பெரும் பாதிப்பு ஏற்படும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் மதிப்பீடு குழு (EAC) விமர்சனம் செய்திருந்தது. இப்போது நில அளவை நடக்கிறது.

யாருக்கு பயன்?

உட்கட்டமைப்புதான் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும் பங்கு வகிக்கிறது என மத்திய அரசு கூறுகிறதே தவிர யாருடைய வளர்ச்சி என்பதை கூறவில்லை. சென்னையில் இருந்து 30 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள காட்டுப்பள்ளி துறைமுகத்தை அதானி குழுமம் வாங்கியுள்ளது. தனியார் நிறுவனங்களின் தேவைக்காக மேற்கொள்ளப்படும் திட்டம் என்று விவசாயிகள், ஆர்வலர்கள் தரப்பில் விமர்சனம் செய்யப்படுகிறது. நிலத்தை கையகப்படுத்துவது தொடர்பாக விவசாயிகளுக்கு தனிப்பட்ட முறையில் நோட்டீஸ் எதுவும் விடுக்கப்படவில்லை.

சாலைக்கு நிலகத்தை கையகப்படுத்த தேசிய நெடுஞ்சாலைகள் சட்டம் 1956 பிரிவு 3-ஏ வழங்கும் சட்ட உரிமையை பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த சாலையினால் யாருக்கு பயன்? எங்களுக்கு என்ன பயன் கிடைக்கப்போகிறது என கேள்வி எழுப்புகிறார்கள் விவசாயிகள். நெமிலி நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்ட போது பணியும் வழங்கப்படவில்லை, நீரும் தரப்படவில்லை. எங்களுக்கான நிவாரண நிதி தொடர்பாக எந்தஒரு ஆலோசனையும் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டுகிறார். வனங்கள், வன விலங்குகள், இயற்கை வளங்களை, விவசாய நிலங்களை, நீராதாரங்கள் என இயற்கையின் போக்கை மாற்றி நாம் என்ன செய்யப்போகிறோம்? என்ற கேள்வியையும் எழுப்புகிறார்.