அஜித்59 ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Read Time:1 Minute, 50 Second

அஜித் குமாரின் 59 வது படமான ‘நேர்கொண்ட பார்வை’படத்தின் ரிலீஸ் தேதியை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் அறிவித்துள்ளார்.
அஜித் நடிப்பில் உருவாகிவரும் படம் ‘நேர்கொண்ட பார்வை’. எச்.வினோத் இயக்கிவரும் இந்தப் படம், இந்தியில் அமிதாப் பச்சன் நடிப்பில் வெளியான ‘பிங்க்’ படத்தின் ரீமேக். நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார்.

படத்தின் தமிழ் தலைப்பும், ஃபர்ஸ்ட் லுக்கும் சென்றமாதம் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்பைத் அதிகரித்தது.  அஜித் குமாருடன் இந்த படத்தில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே ஆகியோர் நடிக்கின்றனர். வித்யா பாலன் நடிக்கும் முதல் தமிழ்ப் படம் இது. இந்தப் படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்த படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு ராமாஜிராவ் ஸ்டூடியோஸில் நடைபெற்று வருகிறது. மே 1-ம் தேதி இந்தப் படம் ரிலீஸாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. ஆனால், தற்போது ரிலீஸ் தேதி தள்ளிப்போயிருக்கிறது.

ஆகஸ்ட் 10-ம் தேதி ‘நேர்கொண்ட பார்வை’ ரிலீஸாகும் என அதிகாரபூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே ட்விட்டரில் இந்திய அளவில் ட்ரெண்டானது. விரைவில் இப்படத்தின் டீஸர் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.