‘சபாக்’கில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக தீபிகா… நடிகைகள் உள்பட பலரும் பாராட்டு

Read Time:4 Minute, 17 Second

‘சபாக்’கில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்ட பெண்ணாக நடிக்கும் தீபிகாவுக்கு இந்தி நடிகைகள் பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.

டெல்லியில் ஆசிட் வீச்சால் பாதிகப்பட்ட லஷ்மி அகர்வால் வாழ்க்கை வரலாறு ‘சபாக்’ என்ற பெயரில் திரைப்படமாக எடுக்கப்படுகிறது. லஷ்மி கேரக்டரில் பிரபல நடிகை தீபிகா படுகோன் நடிக்கிறார். இப்படத்தை ‘ராசி’ படத்தை இயக்கிய மேக்னா குல்சர் இயக்குகிறார். அடுத்த வருடம் ஜனவரி 10-ம் தேதி சபாக் திரைப்படம் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் திங்கள் கிழமை வெளியிடப்பட்டது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டது போன்று தத்ரூபமாகக் காணப்படுகிறார்.

இந்த போஸ்டரில் தீபிகாவின் ஒப்பனையையும், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் பாராட்டி தீபிகா படுகோனுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இந்தி நடிகைகள் பிரியங்கா சோப்ரா, ப்ரினீதி சோப்ரா, அலியா பட், ஜாக்குலின் பெர்னாண்டஸ் உள்ளிட்டோர் வாழ்த்துக்களை பகிர்ந்து உள்ளனர். இது மிகவும் முக்கியமான திரைப்படம், அமேசிங் என பிரியங்கா சோப்ரா கூறியுள்ளார். திரையுலகை சேர்ந்தவர்கள் மட்டுமில்லாது பலரும் பாராட்டினார்கள். சபாக் திங்கள் கிழமை டுவிட்டரில் டிரெண்டாகவும் இருந்தது.

யார் இந்த லஷ்மி அகர்வால்

வன்முறையால் பாதிக்கப்பட்டு, உலகை நம்மால் வெற்றிக்கொள்ள முடியும் என்று தைரியத்துடன் எழுந்து போராடி நம்பிக்கையாக உயர்ந்து நிற்கும் பெண்தான் லஷ்மி அகர்வால். டெல்லியை சேர்ந்த லஷ்மி அகர்வால் 15 வயதில் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டார். காதலிக்க மறுத்ததாக வாலிபரால் ஆசிட் வீச்சில் பாதிக்கப்பட்டார். பின்னர் பல்வேறு நிலைகளை போராடி கடந்து ஒரு வெற்றிக்கரமான பெண்ணாக உயர்ந்து நிற்கிறார். இவருடைய போராட்டம் காரணமாக இந்தியா முழுவதும் ஆசிட் விற்பனைக்கு ஒழுங்குமுறைகளை உச்சநீதிமன்றம் விதித்தது.

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்களின் வாழ்விற்கென தன்னார்வ தொண்டு நிறுவனத்தை ஏற்படுத்தி, அவர்களின் சிகிச்சைக்கு லஷ்மி உதவி வருகிறார். இதற்காக 2014-ம் ஆண்டு சர்வதேச அளவில் தைரியமான பெண் என்ற விருதை அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா வழங்கி லஷ்மியைப் பெருமைப்படுத்தினார். இவரது பிரச்சாரத்தின் மூலம் ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட ஆறு பெண்களுக்கு டெல்லி அரசாங்கம் பணி வழங்கியது.

லஷ்மியின் இந்தப் பயணத்தில், அவருக்குத் துணையாய் நின்று தைரியம் அளித்தவர் சமூக ஆர்வலர் அலோக் தீக்‌ஷித். அவரைத் திருமணம் செய்துகொண்ட லஷ்மிக்கு, புகு என்ற பெண் குழந்தை உள்ளது. தொடர்ந்து தன்னுடைய பணியை செய்து வருகிறார். பலரையும் ஊக்குவித்து வருகிறார். “திரைப்படத்தில் பிரியங்கா நடிப்பது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அவருடைய நடிப்பை விமர்சனம் செய்ய எனக்கு உரிமை கிடையாது. என்னால் செய்ய முடியாத பணியை நான் எப்படி விமர்சனம் செய்ய முடியும். தீபிகா மிகவும் சிறப்பாக நடித்து வருகிறார், சிறப்பான நடிப்பை வழங்குவார் என நம்புகிறேன்,” என குறிப்பிட்டுள்ளார். தீபிகாவுக்கு பலரும் பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.