இதுவரையில் ரூ.540 கோடிக்கு பணம், இலவசப் பொருட்கள் பறிமுதல்… தமிழ்நாடு டாப்..!

Read Time:2 Minute, 41 Second

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் நாடு முழுவதும் இதுவரை ரூ.540 கோடிக்கு பணம், மதுபான பாட்டில்கள், இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

17-வது மக்களவைக்கான தேர்தல் தேதியை மார்ச் 10-ம் தேதி இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. அன்று முதலே இந்தியா முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது. அதிகாரிகள் அதிரடி சோதனையை தொடங்கினர். கடந்த 15 நாட்களில் நாடு முழுவதும் ஆயிரக்கணக்கில் அதிகாரிகள் தலைமையில் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனை நடைபெற்றது. அதிகாரிகள் தனியார் கார், பஸ்கள், அரசுப் பேருந்துகள், விமான நிலையங்கள், ரெயில் நிலையங்கள், சோதனை சாவடிகள் என பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது.

15 நாட்களில் பறக்கும் படைகள் கணக்கில் தெரிவிக்கப்படாத ரூ.540 கோடி மதிப்பிலான பணம், மதுபான பாட்டில்கள், தங்கம், வெள்ளி மற்றும் இலவசப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

பறிமுதல் செய்யப்பட்டதில் தமிழகம் முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் ரூ.107.24 கோடி மதிப்பில் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அடுத்து உத்தரப் பிரதேசத்தில் ரூ.104.53 கோடியும், ஆந்திராவில் ரூ.103.40 கோடியும், பஞ்சாப்பில் ரூ.92.80 கோடியும், கர்நாடக மாநிலத்தில் பொருட்கள், பணம் என மொத்தம் ரூ.26.53 கோடியும், மராட்டியத்தில் ரூ.19.11 கோடியும், தெலங்கானா மாநிலத்தில் ரூ.8.20 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

ஒட்டுமொத்தமாக கைப்பற்றப்பட்ட பொருட்களின் மதிப்பு, பணத்தின் மதிப்பு ரூ.539.99 கோடி என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ரூ.143.37 கோடிக்கு ரொக்கப் பணமும், ரூ.89.64 கோடி மதிப்பிலான மதுவும், ரூ.131.75 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களும், தங்கம் உள்ளிட்ட விலைமதிப்பிலான பொருட்கள் ரூ.162.93 கோடிக்கும், இலவசப் பொருட்கள் ரூ.12.20 கோடிக்கும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.