இந்திய விமானப்படையில் சினூக் ரக ஹெலிகாப்டர்கள்… சீன எல்லையில் வலிமையை அதிகரிக்கும்

Read Time:3 Minute, 16 Second

அமெரிக்காவின் போயிங் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட 4 சினூக் ரக ஹெலிகாப்டர்கள், இந்திய விமானப்படையில் சேர்க்கப்பட்டுள்ளது.

விமான தயாரிப்பில் முன்னணியில் உள்ள அமெரிக்காவின் போயிங் நிறுவனத்திடமிருந்து, புதிதாக 15 சினூக் ரக ஹெலிகாப்டர்களை வங்குவதற்கு கடந்த 2015-ஆம் ஆண்டில் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி முதல்கட்டமாக தயாரிக்கப்பட்ட 4 ஹெலிகாப்டர்கள், கடந்த பிப்ரவரியில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டன. இவை விமானப்படையில் முறைப்படி சேர்க்கப்பட்டது. இந்திய விமானப்படையில் இப்போது பயன்பாட்டில் இருக்கும் எம்.ஐ. 26 ஹெலிகாப்டர்கள் ரஷியாவிடம் இருந்து 1980களில் வாங்கப்பட்டது. இதற்கு மாற்றாக சினூக் ரக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட உள்ளது.

சினூக் ரக ஹெலிகாப்டர்கள், ராணுவத்தில் பயன்படுத்தப்படும் சிறிய ரக பீரங்கிகள், தளவாடங்கள், எரிபொருள் என அதிக எடை கொண்ட பொருள்களை ஏற்றிச் செல்லக் கூடிய திறன் கொண்டது. சண்டிகார் விமானப் படை தளத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், விமானப் படையில் முறைப்படி இணைக்கப்பட்டது. விமானப் படை தலைமை தளபதி பி.எஸ்.தனோவா பேசுகையில், நமது நாடு பலவகையான பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டுள்ளது.

இத்தகைய சூழலில், சினூக் ரக ஹெலிகாப்டர், இந்திய விமானப் படைக்கு மிகவும் அவசியமானதாகும். கடல் மட்டம் முதல் மிக உயரமான மலைப் பகுதி வரையிலான தளங்களில் விமானப் படை இயங்குகிறது. சினூக் ரக ஹெலிகாப்டரில் 11 டன் வரையிலான பொருள்களை எடுத்துச் செல்ல முடியும். ராணுவ போக்குவரத்துக்கு மட்டுமன்றி, பேரிடர் காலங்களில் மீட்புப் பணிகளுக்கும், போர்க்காலங்களில் ஒட்டுமொத்தமாக அகதிகளை வெளியேற்றுவதற்கும், நிவாரணப் பொருள்களைக் கொண்டு சென்று சேர்ப்பதற்கும் இந்த ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்தலாம். மேலும், இந்த ஹெலிகாப்டரை இயக்குவதற்காக இந்திய விமானப் படையைச் சேர்ந்த 12 விமானிகள் அமெரிக்காவில் பயிற்சி பெற்றுள்ளனர் என கூறினார்.

1962-ல் முதல் பயணத்தை தொடங்கிய சினூக் ரக ஹெலிகாப்டர்களில் பல்வேறு தொழில்நுட்ப மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இவ்வகை ஹெலிகாப்டர்களால் மலை இடுக்குகளிலும் சாதூர்யமாக பயணிக்க முடியும். மலை பாங்கான இடங்களில் படைகளின் நிலையை அதிகரிக்க மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சீன எல்லையில் இவ்வகை ஹெலிகாப்டர்களின் எண்ணிக்கையை விமானப்படை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது.