எங்களுக்கு மதுபானம், ரொக்கம், இலவசங்கள்தான் முக்கியம்…! அதிர்ச்சி ரிப்போர்ட்

Read Time:2 Minute, 24 Second

வாக்களிப்பதை தீர்மானிக்கும் காரணியாக மதுபானம், ரொக்கம், இலவசங்கள் இடம்பெற்று உள்ளது என ஏடிஆர் அமைப்பின் ஆய்வில் அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

ஜனநாயக சீர்த்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு (ஏடிஆர்) நாடு முழுதும் 2.7 லட்சம் மக்களுக்கும் அதிகமானோரிடம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது. 534 மக்களவை தொகுதிகளிலும் கல்வி, வேலைவாய்ப்பு, அடிப்படை கட்டமைப்பு, மருத்துவ வசதி உள்பட 31 விஷயங்களை முன்வைத்து கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது. இந்த விஷயங்களில் அரசின் செயல்பாடு சராசரிக்கும் கீழ் என்று வாக்காளர்கள் உணர்வதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

ஆய்வில் 97.86% வாக்காளர்கள் கிரிமினல் அல்லது குற்றப்பின்னணி உள்ள வேட்பாளர்கள் நாடாளுமன்றத்திலோ, சட்டமன்றத்திலோ இடம்பெற கூடாது என்று கருத்து தெரிவித்துள்ளனர். ஆனால் 35.89% வாக்காளர்கள் ஒரு வேட்பாளர் குற்றப்பின்னணி உள்ளவராக இருந்தாலும்  கடந்த காலத்தில் தொகுதி மக்களுக்கு நல்லது செய்திருந்தால் வாக்களிப்பதில் தவறில்லை என்று தெரிவித்துள்ளனர்.

மக்கள் வாக்களிப்பதைத் தீர்மானிக்கும் காரணிகளில் பிரதானமாக மதுபானம், ரொக்கம், இலவசங்கள் ஆகியவையே முக்கியமாக இருப்பதாக தெரியவந்துள்ளது. ஆய்வில் 41.34% மக்கள், மதுபானம், ரொக்கம், இலவசங்கள் விநியோகமே யாருக்கு வாக்களிக்கப் போகிறோம் என்பதைத் தீர்மானிப்பதாக தெரிவித்துள்ளதாக இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. வேலை வாய்ப்புகள் இன்னும் சிறப்பாக இருக்க வேண்டும், ஆரோக்கியம், சுகாதாரத் துறை சார்ந்த அக்கறைகள் ஆகியவற்றுக்கே மக்கள் பிரதான முன்னுரிமை அளித்து வருகின்றனர். 2017 முதல் மக்கள் அதிகம் முன்னுரிமை அளிக்கும் விஷயங்கள் வேலை வாய்ப்பு, சுகாதாரம் மற்றும் ஆரோக்கியம் என்று ஏடிஆர் சர்வே தெரிவிக்கிறது.