நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது…

Read Time:2 Minute, 43 Second

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டது என பா.ஜனதா தலைவர் முரளி மனோகர் ஜோஷி கூறியுள்ளார்.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜனதா மூத்த தலைவர்களுக்கு போட்டியிட வாய்ப்பு அளிக்கப்படவில்லை.

2014-ம் ஆண்டில் மார்க்தர்ஷக் மண்டல் குழுவில் இடம் பெற்ற பா.ஜனதா மூத்த தலைவர்கள் தேர்தலில் போட்டியிடக்கூடாது என்று தாமாகவே முன்வந்து முடிவு எடுக்க வேண்டும் என்று பா.ஜனதா தலைமை கூறியது குறிப்பிடத்தக்கது. இதனால்தான் அத்வானி, சாந்தகுமார், முரளிமனோகர் ஜோஷி, கரியா முண்டா ஆகியோருக்கு சீட் வழங்கப்படவில்லை. இதுதொடர்பாக விமர்சனங்கள் எழுகிறது.

குஜராத் மாநிலம் காந்திநகரில் கடந்த 5 முறை தேர்தலில் போட்டியிட்டு எம்.பியாக இருந்து வரும் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு இந்த முறை சீட் அளிக்கப்படவில்லை. அத்வானிக்கு 91-வயது ஆகியதால், வயதுமூப்பு அடிப்படையில் அவருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதாக கூறப்பட்டது. காந்திநகர் தொகுதி இப்போது அமித்ஷாவிற்கு சென்றுள்ளது. அதேபோல முரளி மனோகர் ஜோஷிக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. அத்வானியை போன்று நானும் தேர்தலில் போட்டியிட வேண்டாம் என கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என கோஷி கூறியதாக செய்தி வெளியாகியுள்ளது.

முரளி மனோகர் ஜோஷியிடம், கான்பூர் தொகுதியிலோ, வேறு எங்கேயோ மீண்டும் தாங்கள் போட்டியிட வேண்டாம் என்று பாஜக தலைவர் அமித் ஷா, பிரதமர் மோடி கேட்டுக்கொண்டதாக ராம் லால் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கடந்த 2009-ம் ஆண்டு தான் போட்டியிட்டு வென்று வாரணாசி தொகுதியை பிரதமர் மோடிக்கு கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் முரளி மனோகர் ஜோஷி விட்டுக்கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் கான்பூரில் போட்டியிட்ட ஜோஷி 57 சதவீத வாக்குகளுடன் வெற்றி பெற்றார். தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று கேட்டுக்கொண்டதை தெரிவிக்கும் வகையில் ஜோஷி கடிதம் எழுதியுள்ளார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.