“கொய்யாப் பழம், சீதாப்பழம் தரனே செல்லக்குட்டி…!” குரங்குகளை வனத்திற்குள் அனுப்ப ‘புது டெக்னிக்’

Read Time:4 Minute, 35 Second

குரங்குகளை மீண்டும் வனத்திற்கு வரச்செய்ய வனத்துறையினர் கொய்யா மற்றும் சீதா மரங்களில் நடுவு செய்து வருகிறார்கள்.

ஒடிசாவில் மாநில முழுவதும் குரங்குகள் உணவு தேடி தங்களின் வாழ்விடமான வனத்தைவிட்டு வெளியேறுகிறது, கிராமவாசிகள் மற்றும் வன பாதுகாப்பாளர்களுக்கு தொந்தரவு கொடுக்கிறது. அதே நேரத்தில் குரங்குகள் தங்கள் இயற்கையான வாழ்விடங்களில் இருந்து வெளியே வருகின்றபோது உயிருக்கு ஆபத்து ஏற்படுகிறது. ஒடிசாவின் காலஹந்தி மாவட்டத்தில் பிஸ்வந்த்பூர், காலடிஹாட் மலைப்பகுதி உள்ளது. இங்குள்ள பவாந்திபாட்னா, லாஞ்சிகார்க் சாலையில் நாள்தோறும் பகல்நேரத்தில் ஏராளமான குரங்குகளைக் காண முடியும்.

குரங்குகள் அவ்வழியாக வாகனங்களில் செல்வோரிடம் உணவு பொருட்களை வாங்கி உண்கிறது. சாலையில் வீசப்படும் உணவுப்பொருட்களை ஓடிச்சென்று எடுத்து சாப்பிடுகிறது. இதனால் அவைகள் வனத்திற்குள் சென்று உணவுப்பொருட்களை தேடுவது கிடையாது. சாலையில் செல்வோர்களையே எதிர்பார்க்கிறது. இதனால் இரைதேடி உண்ணும் பழக்கத்தினை மறக்கிறது. சாலைகளில் வீசும் பொருட்களை எடுக்கச் செல்லும் போது பிற வாகனங்களில் அடிப்பட்டு உயிரிழக்கும் சம்பவங்களும் நடக்கிறது.

குரங்குகள் தங்களின் வாழிடம் காடுகள்தான் என்ற நினைவை மறந்துவிடக்கூடும் என்ற நிலையும் ஏற்படுகிறது.

இதனை தடுக்கும் வகையில் வனத்துறை நடவடிக்கையை மேற்கொள்கிறது. இதுதொடர்பாக காலஹந்தி மண்டலம்(தெற்கு) வனத்துறை அதிகாரி டி. அசோக் குமார் பேசுகையில், “குரங்குகளை மீண்டும் வனத்துக்குள் போகச்செய்ய நாங்கள் பல்வேறு நடவடிக்களை மேற்கொள்கிறோம். முதலில் குரங்குகளுக்கு யாரும் உணவுகள் கொடுக்காமல் இருக்க தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்கிறோம். குரங்களுக்கு யாரும் உணவுகளை கொடுக்காதீர்கள் என்று விளம்பர பேனர்களை வைத்துள்ளோம். யாரேனும் உணவு கொடுக்கிறார்களா என்பதை ஆய்வும் செய்கிறோம்.

வலுக்கட்டாயமாக நடு காட்டிற்கு விரட்டினாலும் அவைகள் மீண்டும் இங்குதான் வரும். 7, 8 குரங்குகள் இருந்தால் வனத்துக்குள் விட முடியும். ஆனால் இங்கு ஆயிரக்கணக்கான குரங்குகள் சாலைப்பகுதியையொட்டி இருப்பதால் வனத்துக்குள் கொண்டுபோய் விடுவது சாத்தியமில்லை நிலையாக உள்ளது. உணவுக்காக நாள்தோறும் சாலையில் குரங்குகள் அமர்ந்திருபு்பதையும் பார்க்க முடியவில்லை. குரங்குகளுக்கு உணவுகொடுப்பதை நிறுத்தினால், குரங்குகள் வேறுவழியின்றி உணவுதேட வனத்துக்குள் செல்லும். அதேசமயம், வனத்துக்குள்ளும் குரங்குகளுக்கு உணவு கிடைக்க வேண்டும்.

எங்களுடைய வனப்பகுதியில் 363 ஹெக்டேர் அளவில் வெற்று இடம் உள்ளது. இப்போது அங்கு பலன் அளிக்கும் வகையிலான மரங்களை நட்டு வளர்க்கிறோம். அங்கு கொய்யா, மாதுளை, சீதா, மா உள்ளிட்ட பழ மரங்களை வளர்க்கிறோம். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னதாக 40 ஹெக்டார் அளவில் நடப்பட்ட மரங்கள் இப்போது பலன் கொடுக்க தொடங்கிவிட்டன. பல்வேறு மரங்கள் விரைவில் பலன் கொடுக்கும். மரங்களில் பழங்கள் கிடைக்க தொடங்கியதால் சாலையில் செல்வோரிடம் உணவு வாங்கும் குரங்குகள் எண்ணிக்கை குறைய தொடங்கி உள்ளது. இது காலப்போக்கில் படிப்படியாக குறையும் என்று நம்புகிறோம். இந்த முயற்சி வெற்றி அடைந்துவிட்டால், இதை அடுத்தடுத்த பகுதிகளுக்கும் கொண்டு செல்வோம் என்று கூறியுள்ளார். அவர்களுடைய முயற்சி வெற்றியடைய வாழ்த்துக்கள்…