நாங்கள் சுத்தம் செய்யவில்லை என்றால் கங்கை நீரை குடித்திருக்க முடியுமா? பிரியங்காவிற்கு கட்காரி கேள்வி

Read Time:2 Minute, 16 Second

நாங்கள் சுத்தம் செய்யவில்லை என்றால் கங்கை நீரை குடித்திருக்க முடியுமா? என பிரியங்காவிற்கு மத்திய அமைச்சர் கட்காரி கேள்வி எழுப்பியுள்ளார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் பிரசாரத்தை தொடங்கிய பிரியங்கா காந்தி கங்கை நதி வழியாக படகில் சென்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது கோவில்களுக்கும் சென்று சிறப்பு பூஜையும் செய்தார். கங்கை நதிக்கும் பூஜையை செய்தார். அப்போது கங்கையின் நீரை அவர் அள்ளிக் குடித்துள்ளார். இதுதொடர்பான வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகியது.

கங்கையை சுத்தம் செய்வோம் என்பது பிரதமர் மோடியின் கனவு திட்டமாகும். பா.ஜனதா ஏற்கனவே வாக்குறுதியை கொடுத்திருந்தது. அதற்கான பணிகளையும் மேற்கொள்வதாக கூறியது. இப்போது பிரியங்காவின் இந்த வீடியோவை வைத்து, நாங்கள் சுத்தம் செய்யவில்லை என்றால் குடித்திருக்க முடியுமா? என்று பா.ஜனதாவினர் கேள்வியை எழுப்பி வருகிறார்கள். காங்கிரஸ் ஆட்சியில் கங்கை மோசமாக இருந்தது என்றும் இப்போது சுத்தமாகியுள்ளது எனவும் பிரசாரம் செய்கிறார்கள்.

மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பேசுகையில், கங்கை நீரை இதற்கு முன்னதாக பிரியங்கா குடித்திருக்க முடியுமா?. பா.ஜனதா அரசு கங்கையை சுத்தம் செய்ததால்தான் அதன் நீரை பிரியங்கா அருந்த முடிந்தது. பிரயாக்ராஜிலிருந்து வாரணாசிக்கு நீர்வழிப் பாதையை எங்களுடைய அரசு அமைத்துள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்திருந்தால் இதுபோன்று பிரியங்கா கங்கையில் பயணம் செய்திருக்க முடியுமா?. 2020 மார்ச் மாதத்திற்குள் கங்கை 100 சதவிகிதம் சுத்தமாகி விடும் என கூறியுள்ளார்.