தமிழக அரசு மருத்துவமனைகளில் கொடூரம்; கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தி 15 கர்ப்பிணிகள் உயிரிழப்பு

Read Time:5 Minute, 17 Second

தமிழக அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தியதால் 15 பேர் உயிரிழந்துள்ளனர் என அதிர்ச்சிகரமான தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு இறுதியில் சாத்தூரில் கர்ப்பிணி ஒருவருக்கு அரசு மருத்துவமனையில் எச் ஐவி பாதிப்பு ரத்தம் ஏற்றப்பட்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது மேலும் அதிர்ச்சிகரமான தகவல் அரசு மருத்துவமனைகளின் அவலத்தை வெளிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ளது. அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிகளுக்கு கெட்டுப்போன ரத்தத்தை செலுத்தியதால் கடந்த 4 மாதங்களில் 15 கர்ப்பிணிகள் மரணமடைந்துள்ளதாக அதிர்ச்சியான தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த ஜனவரி மாதம் வரை 4 மாதங்களில் தமிழகத்தின் தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி போன்ற அரசு மருத்துவமனைகளில் உள்ள ரத்த வங்கிகள் மூலம் கர்ப்பிணி பெண்களுக்கு செலுத்தப்பட்ட ரத்தத்தின் மூலம் 15 கர்ப்பிணிகள் உயிர் இழந்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவலை அடுத்து தர்மபுரி, ஓசூர், கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைகளில் உள்ள ரத்த வங்கிகளில் மூத்த அரசு மருத்துவர்கள் மற்றும் உயரதிகாரிகள் நடத்திய முதல்கட்ட சோதனையில், தகுதியற்றதும், கெட்டு சிதைந்து போன ரத்தத்தை ஏற்றியதால், கர்ப்பிணிகளும், குழந்தை பெற்ற தாயார்களும் இறந்துபோன விவரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.

முறையான சீதோஷ்ண நிலையில் சேமிக்கப்பட்ட ரத்தத்தை பராமரிக்கப்படாததால் கெட்டு சிதைந்து போன ரத்தத்துக்கும், அது பாதுகாப்பானது என்று மருத்துவர்கள் சான்று வழங்கியிருப்பதுதான் அனைவரையும் அதிரவைக்கிறது.

“பெண்களுக்கு ரத்தம் ஏற்றப்பட்டதும் சிக்கலான நிலை ஏற்பட்டுள்ளது. ரத்தம் ஏற்றப்பட்ட சில மணி நேரங்களில் பக்க விளைவுகள் ஏற்பட்டதாகவும், வலிப்பு ஏற்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட பெண்கள் தெரிவித்துள்ளனர். மோசமான தரத்தில் இருந்த ரத்தம் ஏற்றப்பட்டுள்ளது,” என அதிகாரி ஒருவர் தெரிவிப்பதாக டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து கடுமையான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலர் பீலா ராஜேஸ் தெரித்தவர், இதுதொடர்பாக அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையைச் சேர்ந்த மருத்துவர் எம்.சந்திரசேகர், கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனை மருத்துவர் நாராயணசாமி, ஓசூர் அரசு மருத்துவமனை மருத்துவர் சுகந்தா ஆகிய 3 ரத்த வங்கி அதிகாரிகள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்வதோடு, துறை ரீதியான நடவடிக்கையை எடுக்கவும் உத்தரவிட்டுள்ளார்.

அவர்கள் தவிர, 12-க்கும் மேற்பட்ட அரசு செவிலியர்கள் மற்றும் ஆய்வுக்கூட தொழில்நுட்ப வல்லுனர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், தவறான ரத்தம் செலுத்தப்பட்டு கர்ப்பிணிகள் 15 பேர் உயிரிழந்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறானது என்றும், இதுபோன்று கர்ப்பிணிகள் உயிரிழந்திருக்கிறார்களா என்பதை கண்டறிய உண்மை கண்டறியும் குழு அமைக்கப்பட்டுள்ளது என்று பீலா ராஜேஸ் கூறியுள்ளார்.

கெட்டு சிதைந்த ரத்தத்தை உடலில் ஏற்றினால் என்ன செய்யும்? கொட்டு சிதைந்த ரத்தத்தை பெண்களின் உடலில் செலுத்தியதும் அவர்களுக்கு உடனடியாக பல்வேறு பிரச்னைகள் உடலளவில் எழும். சில நிமிடங்களில் வலிப்பு வந்ததுபோன்று உடல் வெட்டி வெட்டி இழுக்கும். அதிகபட்சமாக ரத்தத்தில் எந்தவித மாற்றங்களும் ஏற்படாத வகையில் 42 நாட்கள் பாதுகாக்க முடியும் என்ற நிலையில், புதிய ரத்தத்துக்கும், பழையதாகி கெட்டுப்போன தகுதியற்ற ரத்தத்துக்கும் உள்ள வேறுபாட்டை மருத்துவ தொழிலில் இல்லாத சாதாரணமான ஒருவரே பார்த்த அளவிலேயை கண்டுபிடித்துவிட முடியும். ஆனால் கெட்டுப்போன ரத்தத்துக்கு பாதுகாப்பானது என்று மருத்துவர்களே நற்சான்று கொடுத்திருப்பதுதான் வேதனையிலும் வேதனை என மருத்துவத்துறை சார்ந்தவர்கள் தங்களது வேதனைகள் வெளிப்படுத்தியுள்ளனர்.