ஆர்.பி.ஐ. கவர்னர் சக்தி காந்ததாஸ் நியமனம் தொடர்பான தகவல்களை வெளியிட மத்திய அரசு மறுப்பு

Read Time:5 Minute, 12 Second

ஆர்.பி.ஐ. கவர்னர் சக்தி காந்ததாஸ் நியமனம் தொடர்பான தகவல்களை வெளியிட மத்திய அரசு மறுத்து விட்டது.

பணமதிப்பிழப்பு நடவடிக்கை, மத்திய வங்கியின் இருப்பு தொகை மற்றும் கடன் வழங்கும் விதிமுறைகள் ஆகிய விவகாரங்களால் ரிசர்வ் வங்கிக்கும், மத்திய அரசுக்கும் இடையே மோதல் போக்கு காணப்பட்ட நிலையில், கடந்த வருடம் இறுதியில் இதுவரையில் இல்லாத நிகழ்வாக ஆர்.பி.ஐ. சட்டத்தின் விதிமுறையை பயன்படுத்தி வங்கியின் கவர்னராக இருந்த உர்ஜித் படேல் பேச்சுவார்த்தை என்ற நிலைக்கு கொண்டுவரப்பட்டார். இதனையடுத்து தன்னுடைய சொந்த காரணங்களுக்காக பதவியை ராஜினாமா செய்கிறேன் என டிசம்பர் 10-ம் தேதி உர்ஜித் படேல் அறிவித்தார்.

உர்ஜித் படேல் ராஜினாமா காரணமாக மத்திய அரசை எதிர்க்கட்சிகள், பொருளாதார நிபுணர்கள் விமர்சனம் செய்தனர். இதனையடுத்து மத்திய அரசின் பொருளாதார விவகாரங்கள் துறையின் முன்னாள் செயலாளர் சக்தி காந்ததாஸ் அப்பதவிக்கு வந்தார். அப்போது இந்திய-அமெரிக்க பொருளாதார வல்லுநர் அபிஜித் பானர்ஜி கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். பணியிலிருந்து ஓய்வு பெற்ற அதிகாரியை ரிசர்வ் வங்கியின் கவர்னராக அறிவித்ததற்கு எதிர்ப்பை பதிவு செய்தார். மத்திய அரசு இந்த முடிவு முக்கிய பொது நிறுவனங்களில் நிர்வாகம் தொடர்பாக நிறைய “அச்சுறுத்தும்” கேள்விகளை எழச்செய்கிறது எனவும் குறிப்பிட்டார்.

முன்னாள் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன் பேசுகையில் மத்திய வங்கியின் சுயாட்சி மிகவும் “புனிதமானது” அது சமரசம் செய்யப்படக் கூடாது என குறிப்பிட்டார். இவ்விவகாரத்தில் மத்திய அரசு பல்வேறு விமர்சனங்களை எதிர்க்கொண்டது.

மத்திய அரசு மறுப்பு

இப்போது ஆர்.பி.ஐ. கவர்னர் சக்தி காந்ததாஸ் நியமனம் தொடர்பான தகவல்களை வெளியிட மத்திய அரசு மறுத்துள்ளது.

2108 டிசம்பர் 11-ம் தேதி பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை கூட்டத்தில் சக்தி காந்ததாஸ் 3 வருடங்களுக்கு வங்கியின் ஆளுநராக நியமனம் செய்யப்படுகிறார் என அறிவிக்கப்பட்டது. அவருடைய நியமனம் தொடர்பான தகவல்கள் ஆர்.பி.ஐ. சட்டம் மூலம் மத்திய அரசின் நிதி அமைச்சகத்தின் நிதி சேவைகள் அமைப்பிடம் (டிஎப்எஸ்) கேட்கப்பட்டுள்ளது. பிடிஐ செய்தி நிறுவன செய்தியாளர் தாக்கல் செய்த மனுவில், விதிமுறைகளின்படி காலியிடம் தொடர்பான விளம்பரம் அல்லது சுற்றறிக்கை, யாரெல்லாம் இந்த பதவிக்கு விண்ணப்பம் செய்தார்கள், யாருடைய பெயரெல்லாம் தகுதியானவர்கள் பட்டியலில் இடம் பெற்றது, ஆர்.பி.ஐ. கவர்னரை நியமனம் செய்வது தொடர்பாக மினிட் மீட்டிங்கில் எடுக்கப்பட்ட முடிவுகள் ஆகிய தகவல்களை அளிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.

நிதி சேவைகள் அமைப்பு இதற்கு அளித்துள்ள பதிலில், நிதித்துறை ஒழுங்குமுறை நியமனம் தேடல் கமிட்டி (எப்எஸ்ஆர்ஏஎஸ்சி) பரிந்துரையின் அடிப்படையில் அமைச்சரவையின் நியமனங்கள் குழு ஆர்.பி.ஐ. கவர்னரை தேர்வு செய்துள்ளது. கமிட்டிக்கு அமைச்சரவை குழு செயலாளர் தலைமை தாங்குகிறார். பிரதமரின் கூடுதல் செயலாளர் மற்றும் நிதியமைச்சக செயலாளர் இடம் பெறுகின்றனர். வெளியிலிருந்து மூன்று நிபுணர்கள் இதில் உறுப்பினர்களாக உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அவர்களுடைய பெயரை குறிப்பிடவில்லை. இதுதொடர்பான விண்ணப்பத்தை மத்திய அமைச்சரவை செயலகத்திற்கு மாற்றி விட்டது.

ஆர்.டி.ஐ. விண்ணப்பத்திற்கு மத்திய அமைச்சரவை செயலகம் அளித்துள்ள பதிலில், “இவ்விவகாரத்தில், இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக சக்தி காந்ததாஸ் நியமனம் தொடர்பான தகவல்கள் கோரப்பட்டது, அமைச்சரவை நியமனம் (ACC) தொடர்புடைய கோப்பு அறிவிப்புகள் / ஆவணங்கள் / பதிவுகளை வெளியிட தகவல் அறியும் உரிமைச் சட்டம் 205 பிரிவு 8 (1) (i) விலக்கு அளிக்கிறது” என தெரிவிக்கப்பட்டுள்ளது. அமைச்சரவை ஆவணங்கள், மந்திரிகள், செயலாளர்கள் மற்றும் பிற அதிகாரிகளின் ஆலோசனையின் பதிவுகளை வெளியிட இப்பிரிவு தடை விதிக்கிறது.