தூத்துக்குடியில் போட்டியிடுவது ஏன்? திமுக வேட்பாளர் கனிமொழி விளக்கம்

Read Time:3 Minute, 45 Second

தூத்துக்குடியில் போட்டியிடுவது ஏன் என்பது தொடர்பாக திமுக எம்.பி. கனிமொழி விளக்கம் அளித்துள்ளார்.

தூத்துக்குடி நாடாளுமன்றத் தொகுதியில் திமுக சார்பில் கனிமொழியும், பா.ஜனதா சார்பில் தமிழிசையும் போட்டியிடுகிறார். இருவர் இடையேயும் பிரசாரத்தில் கடும் போட்டி நிலவுகிறது. இருவரும் நாடார் வாக்குகளை குறிவைத்து இத்தொகுதியில் போட்டியிட கவனம் செலுத்தியதாக கூறப்பட்டது.

நாடார்களின் வாக்கு வங்கியைக் குறிவைத்துதான் நீங்களும் கனிமொழியும் தூத்துக்குடியைத் தேர்வு செய்ததாகக் கூறப்படுகிறதே? என்ற கேள்விக்கு தமிழிசை பதில் அளிக்கையில், நிச்சயமாகக் கிடையாது. ஒருவேளை அவர் (கனிமொழி) வேண்டுமானால் அப்படி நினைத்திருக்க வாய்ப்பு இருக்கலாம். எனக்குத் தெரியவில்லை. நான் என்னுடைய பேச்சு, எழுத்து, திறமை, ஆளுமை ஆகியவற்றைத்தான் பெரிதாக நம்பியிருக்கிறேன். அரசியலுக்காக வெற்றிகரமாக இயங்கிவந்த மருத்துவத் தொழிலை உதறிவிட்டு வந்தவள் நான். தென்பகுதியில் என் பணி இருக்கவேண்டும் என்ற நெடுநாளைய ஆசையை நிறைவேற்றும் வாய்ப்பாக இதைப் பார்க்கிறேன் என கூறியிருந்தார்.

கனிமொழி விளக்கம்

இந்நிலையில் தூத்துக்குடியில் போட்டியிடுவது ஏன் என்பது தொடர்பாக கனிமொழி விளக்கம் அளித்துள்ளார். கனிமொழி முதல் முறையாக தேர்தலில் போட்டியிட்ட மக்களை எதிர்க்கொள்கிறார். கனிமொழி முகநூலில் அளித்துள்ள விளக்கத்தில், ஐந்தாண்டுகளுக்கு முன்னால், பிரதம மந்திரியின் கிராமங்கள் தத்தெடுப்பு திட்டத்தின் கீழ் தூத்துக்குடியில் உள்ள வெங்கடேசபுரம் கிராமத்தைத் தத்தெடுத்தேன். என்னுடைய எம்.பி. நிதியிலிருந்து பல்வேறு திட்டங்களுக்கும் நிதியளித்து உள்ளேன். அதன் காரணமாக, தூத்துக்குடிக்கு அவ்வப்போது வரக்கூடிய வாய்ப்பைப் பெற்றேன். இங்கு கிராம சபைக் கூட்டங்களில் பங்கேற்கக் கூடிய வாய்ப்பையும் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

அதனால், தூத்துக்குடியில் உள்ள சூழ்நிலைகளை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. இந்தத் தொகுதியில் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், அதனை அதிமுக அரசு சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. கிராமங்களில் அடிப்படை வசதிகள் இல்லை. தொழிற்சாலைகள் இல்லை. வேலை வாய்ப்புகள் இல்லை. இதையெல்லாம் கண்கூடாகப் பார்க்க முடிந்தது. அதனால், தூத்துக்குடி பகுதியில் என்னுடைய முயற்சிகளால், வளர்ச்சியைக் கொண்டு வர முடியும் என்பதற்காகவே இந்தத் தொகுதியைத் தேர்ந்தெடுத்தேன். மு.க.ஸ்டாலினும் போட்டியிடுவதற்கு அனுமதித்துள்ளார் என கூறியுள்ளார்.