ஜெயப்பிரதா, மேனகா காந்தி, வருண் காந்திக்கு பா.ஜனதாவில் சீட்…

Read Time:2 Minute, 27 Second

உத்தரபிரதேச மாநிலத்தில் 29 தொகுதிகளுக்கும், மேற்கு வங்காளத்தில் 10 தொகுதிகளுக்கும் பாஜக வேட்பாளர்கள் பட்டியலை அறிவித்துள்ளது.

பா.ஜனதாவில் நேற்று காலை இணைந்த ஜெயப்பிரதாவுக்கு ராம்பூர் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேனகா காந்திக்கும், வருண் காந்திக்கும் தொகுதி ஒதுக்கிடு செய்யப்பட்டுள்ளது. வருண் காந்திக்கு பிலிப்பைட் தொகுதியும், மேனகா காந்திக்கு சுல்தான்பூர் தொகுதியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காங்கிரசில் இருந்து பா.ஜனதாவிற்கு சென்ற ரீட்டா பகுகுணா ஜோஷிக்கு அலகாபாத் தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மூத்த பா.ஜனதா தலைவர் முரளி மனோகர் ஜோஷியின் பெயர் வேட்பாளர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டது.

ஜெயபிரதா

பிரபல இந்தி நடிகையான ஜெயப்பிரதா தமிழில் சலங்கை ஒலி, நினைத்தாலே இனிக்கும், தசாவதாரம் உள்ளிட்ட படங்களில் நடித்தவர். 1994-ல் என்.டி.ராமாராவ் முன்னிலையில் தெலுங்கு தேசக் கட்சியில் சேர்ந்தார். பின்னர் சந்திரபாபு நாயுடு பிரிவில் சேர்ந்த அவருக்கு 1996-ம் ஆண்டில் மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டது. பின்னர் சந்திரபாபு நாயுடுவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அக்கட்சியிலிருந்து விலகி சமாஜ்வாடி கட்சிக்கு சென்றார்.

2004 பொது தேர்தலின்போது உத்தரப் பிரதேசத்தின் ராம்பூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட்டு வெற்றியும் பெற்றார். அதேபோல 2009-ல் ராம்பூர் எம்.பி.யாகத் தேர்வு செய்யப்பட்டார். அதைத்தொடர்ந்து சமாஜ்வாடியில் இருந்தும் விலகிய அவர், அமர்சிங் என்பவருடன் இணைந்து 2010-ல் ராஷ்ட்ரிய லோக் மன்ச் என்னும் கட்சியை தொடங்கினார். 2014 தேர்தலில் அவருக்கு தோல்வியே கிடைத்தது. இந்நிலையில் செவ்வாய்க்கிழமை நடிகை ஜெயப்பிரதா பா.ஜனதாவில் இணைந்தார்.