இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதா? ரகுராம் ராஜன் சந்தேகம்

Read Time:4 Minute, 11 Second

இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதா? என ரகுராம் ராஜன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என மத்திய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது. இது, கடந்த நிதியாண்டின் 6.7 சதவீத வளர்ச்சியை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து மத்திய புள்ளியியல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி), நடப்பு நிதியாண்டில் 7.2 சதவீதமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 31-ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கையில் நிறுவனங்களின் நிதிநிலை அறிக்கைகள், அரசின் செலவினங்கள் போன்ற பல்வேறு குறியீடுகளை அடிப்படையாகக் கொண்டு ஜிடிபி நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், தற்போது தயாரிப்பு மற்றும் வேளாண் துறைகளின் செயல்பாடுகளில் காணப்படும் முன்னேற்றங்களின் அடிப்படையில் ஜிடிபி கணிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, நடப்பு 2018-19-ஆம் நிதியாண்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.2 சதவீதமாக இருக்கும். இது, 2017-18-ஆம் நிதியாண்டில் காணப்பட்ட பொருளாதார வளர்ச்சியான 6.7 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் அதிகம். குறிப்பாக, வேளாண்மை, வனம், மீன்பிடி துறைகளின் செயல்பாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளதையடுத்து முந்தைய நிதியாண்டில் 5 சதவீதமாக கணிக்கப்பட்ட இத்துறையின் வளர்ச்சி 6.8 சதவீதமாக இருந்தது. அதேபோன்று, தயாரிப்புத் துறையின் செயல்பாடுகளும் சூடுபிடித்ததால் அத்துறையின் வளர்ச்சியும் 6 சதவீதமாக இருக்கும் எனக் கணிக்கப்பட்ட நிலையில், அது 7.5 சதவீதமாக இருந்தது என தெரிவிக்கப்பட்டது.

ரகுராம் ராஜன் சந்தேகம்

இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதா? என ரகுராம் ராஜன் சந்தேகம் எழுப்பியுள்ளார்.

இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னராக செப்டம்பர் 2013 மற்றும் செப்டம்பர் 2016-க்கு இடைப்பட்ட காலங்களில் பணியாற்றிய ரகுராம் ராஜன், சர்வதேச செலாவணி மையத்தின் (ஐஎம்எப்) பொருளாதார ஆலோசகராக இருந்து வருகிறார்.

ரகுராம் ராஜன் ஆங்கில செய்தி சேனலுக்கு அளித்துள்ள பேட்டியில், இந்திய பொருளாதாரம் 7 சதவீத வளர்ச்சி அடைந்துள்ளதாக எந்த புள்ளிவிவரப்படி கூறியிருக்கிறார்கள் என்பது தெரியவில்லை. இந்தியாவின் உண்மையான வளர்ச்சி விகிதத்தை அறிய ஒரு சீரமைப்பு நடவடிக்கை தேவை. ‘ஒரு மத்திய மந்திரி (மோடி அமைச்சரவையில் உள்ள மந்திரி) போதிய வேலைவாய்ப்பு இல்லாமல் நாம் எப்படி 7 சதவீத வளர்ச்சி அடைய முடியும். நாம் 7 சதவீத வளர்ச்சி அடையவில்லை’ என்று கூறியது எனக்கு தெரியும்.

எனவே ஒரு நடுநிலையான குழுவை அமைத்து உண்மையான வளர்ச்சி விகிதம் என்ன என்பதையும், புள்ளிவிவரத்தில் குழப்பம் ஏற்பட என்ன காரணம் என்பதையும் கண்டறிந்து உறுதிப்படுத்த வேண்டியது அவசியம் என கூறியுள்ளார். இந்திய பொருளாதார வளர்ச்சியை நியாயப்படுத்தும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, வேலைவாய்ப்பை உருவாக்காமல் 7-8 சதவிதம் பொருளாதாரம் உயர்ந்து இருக்காது என குறிப்பிட்டுள்ளார்.