ஏழைகளுக்கு ஆண்டுதோறும் ரூ.72 ஆயிரம் வழங்கும் ராகுல் காந்தி திட்டம் சாத்தியமா?

Read Time:4 Minute, 49 Second

மத்தியில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு ஆண்டு தோறும் ரூ.72 ஆயிரம் வழங்கப்படும் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அறிவித்துள்ளார்.

குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டத்தை அறிவித்த ராகுல் காந்தி, மிகவும் வறிய நிலையில் (பரம ஏழைகள்) உள்ள 20 சதவீத குடும்பங்களுக்கு குறைந்தபட்ச வருமானமாக ஆண்டொன்றுக்கு ரூ.72 ஆயிரம் வீதம் வங்கி கணக்கில் செலுத்தப்படும். 5 கோடி குடும்பங்களுக்கு இந்த நிதி உதவி கிடைக்கும். அந்த குடும்பங்களில் உள்ள 25 கோடி பேர், இத்திட்டத்தால் நேரடியாக பலன் பெறுவார்கள். இந்த திட்டத்தின் மூலம், இன்னும் 25 கோடி பேரை வறுமையின் பிடியில் இருந்து மீட்கப்போகிறோம்.

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தவுடன், 5 கோடி குடும்பங்கள் அடையாளம் காணப்படும். உலகத்திலேயே இதுதான் மிகப்பெரிய குறைந்தபட்ச வருமான திட்டம். உலகத்தில் எங்குமே இதுபோன்ற திட்டம் கிடையாது என்று குறிப்பிட்டார். இதனை ஏமாற்று வேலையென பா.ஜனதா விமர்சனம் செய்தது.

திட்டம் சாத்தியமா?

இத்திட்டம் பிரபல பொருளாதார நிபுணர் அமர்த்தியா சென்னின் வறுமை குறியீடு அடிப்படையில் சாத்தியம் என்கிறது காங்கிரஸ்.

“குடும்பம் ஒன்று மாதத்திற்கு ரூ. 6000 வருமானம் பெற்றால் கூடுதலாக 6000 ரூபாய் வழங்கப்படும் போது 12 ஆயிரம் ரூபாயை எட்டும்,” என காங்கிரஸ் கணக்கிடுகிறது. 5 கோடி குடும்பங்களை காங்கிரஸ் இலக்காக வைக்கும் வேளையில் இதற்கு ரூ. 3.6 லட்சம் கோடி செலவாகும். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், நிதியமைச்சர் ப.சிதம்பரம் மற்றும் காங்கிரஸ் கட்சியின் புள்ளியல் வல்லுநர் பிரவின் சக்ரவர்த்தி இணைந்து இத்திட்டத்தை தயாரித்துள்ளனர் என தெரிகிறது.

பொருளாதார வல்லுநர்களிடம் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டுதான் அறிவித்துள்ளோம் என காங்கிரஸ் கூறியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஏழைகளுக்கு குறைந்தபட்ச வருவாய்திட்டத்தில் ஆண்டுக்கு ரூ.72 ஆயிரம் வழங்குவது குறித்து ரகுராம் ராஜன் உள்பட ஏராளமான பொருளாதார வல்லுநர்களிடம் ஆலோசித்தேன் என்று தெரிவித்திருந்தார். இத்திட்டம் தொடர்பாக ரகுராம் ராஜனும் தன்னுடைய கருத்தை தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் குறைந்தபட்ச வருவாய் உறுதி அளிப்பு திட்டம் செயல்படுத்தக்கூடியதுதான், ஆனால் நிபந்தனைகள் பொருந்தும் என குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா டுடேக்கு பேட்டியளித்து பேசியுள்ள ரகுராம் ராஜன், காங்கிரஸின் குறைந்தபட்ச வருவாய் உத்தரவாதம் திட்டம் முறையாக நடைமுறைப்படுத்தப்பட்டால் “விஷயங்களை புரட்சிகரமாக்க முடியும்”. அடிமட்ட மட்டத்தில் வளர்ச்சியை உருவாக்குகின்ற வகையில் இந்த திட்டத்தை அமைப்பதற்கான வழிகள் உள்ளன. இது மக்களுக்கு நிதியியல் முடிவுகளை அவர்களே எடுக்க அனுமதிக்கும். இதில் முக்கியமான கேள்வி எப்படி முன்னெடுப்பது என்பதுதான். இது ஏற்கனவே இருக்கும் திட்டங்களுடன் சேர்க்கப்படும் அல்லது சீரமைப்பு திட்டமா? வறுமை ஒழிப்பை இலக்காக வைக்க வாய்ப்பு உள்ளது.

வறுமை ஒழிப்பு திறனை திறம்பட நிர்வகிப்பதற்கான வாய்ப்பும் உள்ளது. திட்டம் திறன்பட செயல்படுத்தப்பட்டால் விஷயங்கள் எப்படி இயங்குகின்றன என்பதை மாற்றவும் முடியும். இருப்பினும் இந்தியாவின் தற்போதைய நிதிநிலை அத்தகைய உயர் செலவின திட்டத்திற்கு உகந்ததல்ல எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அதிகமான செலவை ஏற்படுத்தும் காங்கிரசின் இத்திட்டத்தை ஒருவேளை செயல்படுத்த முடியாமலும் போகலாம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.